Wednesday, July 26, 2017

முதல் மணி


  தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் "சித்திரை - வைகாசி - 2004" இதழில் வெளிவந்து கவிதை.

Wednesday, February 29, 2012

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா


"உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா" - திருமதி ரமணிச்சந்திரன், அழகான கதை। கதை படிக்குமளவுக்கு பொறுமையை தந்த 'உடைஞ்சுபோன என் லப்டொப்க்கு' நன்றி।

நினைவுகளுக்கும் பழமைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மீழப்பெறமுடியாதவை , மனதை ஆட்கொள்ளும் இனிய உணர்வுகள் இப்படி வார்த்தைகளில் பல அர்த்தங்கள் சொல்லமுடியும். எப்படிச் சொன்னாலும் அவை இழப்பின் ஒருவகை வலியைதான் உணர்த்துகின்றன. நினைவுகள் சுவாரிஸ்யமானவை, அவை பழமையை நோக்கிப் பயணிப்பவை. நாங்கள் அதற்கு எதிர்த் திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும் கூட அவை, அவ்வப்போது மனதை பனிமூட்டமாக வந்து முற்றுகையிடும். சில நிமிடங்களிலோ சில மணித்துளிகளிலோ அவை கலைந்துபோய்விடும். காலம் செல்லச் செல்லதான் நினைவுகளுக்கு சுவாரிஸ்யம் கூடுகிறது. நாவல்களையோ கதைகளையோ நாடிச் செல்பவர்களுக்கும் இந்தப் பனிமூட்டத்துக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. எவரோ எழுதும் கதைகளில், அவரவர் தங்கள் தங்கள் நினைவுகளைப் படிக்கிறார்கள். இந்தக் கதைகள் பனிமூட்டம் கலையாமல் வைத்துக்கொள்கின்றன.

மனிதரில், பாந்தமில்லாமல் பந்தம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் இயற்கை அக்கறையாக இருக்கிறதோ என்னவோ, கதாசிரியர்கள் அக்கறையாகவே இருக்கிறார்கள். பந்தமிருந்தாலும், நல்ல பாந்தமே ஆனாலும் வாழ்நாளின் பாதி நாட்கள் சஞ்சலங்களோடுதானே கழிகின்றன, என்பதுதான் பெரும்பாலான அவதானங்களாகக் காணப்படுகின்றன. ஏன் இப்படி உறவுகளையும் உணர்வுகளைப் போட்டுக் குளப்பிக்கொள்கிறார்கள் என்று எனக்குள் அடிக்கடி எண்ணத் தோன்றும். எல்லாவற்றுக்கும் அன்புதான் காரணகர்த்தா என்பது குன்றின்மேல் தூக்கிவைத்த விளக்குகாய் இருக்கிறது. உணர்வுகள் இருக்கின்றவரையில் உறவுகளுக்கான தேவையும் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பது நியதி. ஆக உயிர்வாழ்கின்ற வரையில், மனிதர்களுக்கு ஏதோ ஒரு அனுபந்தம் இருக்கவேண்டும் என்பது அவசியமாகிவிடுகிறது.

"அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு"

அன்பினால் ஏற்படும் ஆசை அல்லது விருப்பம், எல்லோரிடத்திலும் நட்பாயிருக்கின்ற மேன்மையை தேடித்தரும், என்று என்னதான் இந்த அன்பை பற்றி உயர்வாகச் சொன்னாலும் அதுவே "இன்பம் - துன்பம்" என்கிற அதலபாதாள இடைவெளிக்குள் மனிதனைப் போட்டு பந்தாடுகின்றது என்பதுதானே ஜதார்த்தம்.

"உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா " என்கிற பாரதியின் வரிகளை, இந்த நாவலின் தலைப்பாகப் பார்த்ததும் மனம் அதனுள் இழுத்துக்கொண்டு போய்விட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். திருட்டு மாங்காய்க்கு எவ்வளவு சுவை அதிகமோ, அதேபோல திருடிப் படிப்பதுவும் அலாதியானதுதான்.

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்று ஆரம்பிக்கும் பாரதியின் பாடலின் இடையில் வரும் வரிகள்தான் அவை. உண்மையில் "உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி" என்றுதான் அந்தவரி முளுமையடைகின்றது. 'உன்மத்தம்' என்றால் உணர்ச்சியின் உச்சனிலை என்று ஒரு பொருள் இருக்கிறது. உன்னை தழுவினால் நான் உணர்வின் முளுமையான சுகத்தை அனுபவிக்கிறேன் என்பதாக பாடல் வரி சொல்கிறது. அவ்வளவு காதல் அதனால் ஏற்பட்ட ஈர்ப்பு என்பதுதான் பொருள், அன்றி வேறு திசைக்கு அர்த்தங்களை நகர்த்திச்செல்லவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது விளக்கமும்கூட.

இன்னும், திருமதி।ரமனைச்சந்திரனின் வார்த்தைகளையும், இடையிடையே அவர் பயன்படுத்தியிருந்த முதுமொழிகளையும் ரசித்துக்கொண்டும், பெண்மையின் உணர்வுகள் இப்படித்தானிருக்குமோ என்று பலதடவை எனக்குள்ளே கேட்டுக்கொண்டும் படித்துமுடித்திருந்தேன்। இனிமேல், சந்தேகம் என்கிற வார்த்தையை கேட்டால் எனக்கு "அபராஞ்சி" தான் நினைவுக்கு வருவாள் போலிருக்கிறது, அவள் நினைவுக்குள் வந்தால் இலவச வெளிச்சம்தானே, வரட்டும்। காரணம் ஆவள்தான் புடம்போட்ட தங்கம் ஆயிற்றே!... ("அபராஞ்சி" என்றால் - புடம்போட்ட தங்கம் என்று பொருளாம்)

"கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி" - பாரதி

Friday, January 27, 2012

நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு (சீதையின் காதல்)


ராமன் கொடுத்துவைத்தவன், வேறென்ன சொல்ல. அழகிலும் குணத்திலும் நிகரற்ற மங்கை மனைவியாக கிடைத்தால் இன்பம், அதிலும் அவள் அளவற்ற அன்பைத் தருகின்ற காதலியுமாக இருந்தால் கேட்கவும் வேண்டுமா. அழகேயுருவான காதல் மனைவி அருகிருந்தால் வனவாசம் என்ன அஞ்ஞாதவாசமென்ன எல்லாமே பிக்னிக்தான்


ராமன் வனவாசம் செல்லத் தயாராகும்வேளையில் தன் அருமைப் பெண்டாட்டியை பார்த்துச் சொல்கிறான், அடியேன் யாராலும் வளைக்கமுடியாத வில்லை எப்பெரும்பாடுபட்டு வளைத்து நான் கரம் பற்றிய என் காதலியே, நான் போகவிருப்பது சிங்கப்பூர் ஃபிக்னிக் அல்ல, வனவாசம். அதனால் நீ இங்கேயே அரண்மனையிலேயே இருந்துவிடு என்று சொல்கிறான். சதா டொக்கு ஃபிகருகளே கொஞ்சம் பௌசு வந்ததுமே மகாராணிமாதிரி பில்டப் போட்டு ஊருக்கே சீன்போடுற இந்தக்காலத்தில - இவள் தேவதைபோன்ற ராஜகுமாரி, பிறந்ததிலிருந்து எந்தத் துன்பத்தையும் அனுபவித்திராதவள், பூவிலும் மென்மையான பாதங்களை உடையவள் - எப்படி என்னோடு காட்டுக்கு அதுவும் சிங்கம், புலி, நரி இந்தமாதிரி அனிமல்ஸ் எல்லாம் இருக்கிக்கிற பயங்கரக் காட்டுக்கு, சூடு குளிர் கூதல் பார்க்காமல்?.. சான்ஸே இல்ல. வருவாயா? என்று கேட்டாலே டைவேஸ்தான் என்று ராமன் நினைத்திருப்பானோ என்னவோ.

ஆனால் சீதைக்கு வருத்தம், பெரியவர்கள் சொல் கேட்டல் அறமே ஆயினும் பாற்கடலிலிருந்து பிரியாமல் அயோத்திவரை கூட வந்தவளாகிய மனைவியை நடுவழியில் விட்டுவிட்டு பிரிந்து செல்வதென்பது, அப்பெரியவர்கள் சொல்லும் அறத்தை பாதிக்கவில்லையா, சரி போகட்டும் குரவர் தமக்கு நன்மை பயப்பவைதானே அறங்களாகக் கொள்ளப்பட்டன, ஆனாலும் இவ்வளவுதூரம் நம்பி கூட வந்தவளை அருகில் இருக்கும் வனத்துக்கு அழைத்துச் செல்லாமல் தடுப்பதேன் என்று எண்ணி வருந்தினாளாம் சீதை. (அதுவரை நந்தவனத்துக்கும் - வனத்துக்கும் வித்தியாசம் அறிந்திராதவளாய் இருந்தாள் - சீதை எனச் சொல்லப்படுகிறது)

இருந்தாலும் ராமன் யார், அவன் ராஜகுமாரன், வரலாறுகளில் படிக்கப்பட்டு துதிக்கப்படப்போகின்றவன், அப்பழுக்கில்லாதவன் நின்று ஜோசித்து நிதானமக அறங்களுக்கு நியாயம்கற்பிக்கின்றவகையிலும் பெண்டாட்டியை சமாதானம் செய்கின்ற வகையிலும் பதில்சொல்கின்றான்.

"மலைவழி, காட்டுவழி, இரவிலும் வெப்பம் செய்யும் வழி, கூரிய கற்கள் உற்ற வழி, எனவே வெப்பமான கூர்ங்கற்கள் உராய்வதனால் ஏற்படும் வலியைத் தாங்கும் கடுமையுடைய பாதம் அல்ல உன் பாதம்; குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மெல்லிய மலரனைய பாதம். அதனால்தான். இங்கேயெ இருந்துவிடுமாறு கூறினேன் அன்றி உன்னைப் பிரிகின்ற வல்லமை எனக்குமட்டும் எப்படி இருக்கும், ஆதலால் வருத்தாதெ! குரவர் சொன்னால் கொலைகூடக் குற்றமில்லை என்பதைறியாதவளா நீ, என்பது போல ராமன் சமாதானம் செய்யப்பார்க்கிறான்.

ஆனால், இளம் பெண்டாட்டி ராஜகுமாரி - சீதை அக்கணமே பதிலுரைக்கிறாள் இவ்வாறு, மேனியில் மட்டுமல்ல சிந்தையிலும் அழகிற்கு தன்னை விஞ்சியவர் யாருமில்லை என்பது புலப்பட. அந்தப் பாடல் இதுதான்,

"பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."

அடேய் என் புருசனாகிய காதலனே!, "இரக்கம் அற்ற மனத்தில் ஒரு சிறிதும்விருப்பம் இல்லாமல் என்னை விட்டு விலகிச் செல்கின்றாய், உன்னால் வரும் பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும் நிகராகாது, அப்படி இருக்கும்போது, நீ என்னை பிரிந்து செல்வதாகிய பெருந்துயரைவிடவா சுட்டுவிடப்போகிறது உன்னுடன் நான் வரும் அப்பெரிய காடு என்றுரைக்கிறாள்.
அப்படி கேட்ட சீதை உடனேயே உள்ளே சென்று மரவுரியை அணிந்து கொண்டு ராமனுக்கு முன்பே தயார் ஆகிவிடுகிறாள், என்று சொல்கிறது ராமாயணம்.

தன் துணைவிக்கு துன்பத்தை கொடுக்கக்கூடாது என்று கணவனும், துன்பம் என்பதே நான் உனைப் பிரிந்திருப்பதுதான் என்று மனையாளும் நினைக்கிறார்கள். உன் காட்டில் நீ தனியாகப் படப்போகும் இன்பதுன்பங்களோடு பங்கெடுக்காமல் இங்கிருக்கின்ற சௌகரியங்களை நான் அனுபவிக்கின்றதென்பது நரகமல்லவா, அதில் என் ஆன்மா வெந்து வெந்து எரியுமல்லவா - அதைவிட என் மேனி வெந்துபோவது ஒன்றும் வலியில்லை என்றுசொல்லி, கல்லும் முள்ளும் குத்த வெயிலும் பனியும் வாட்ட காட்டுக்குச் செல்கிறாள். காடென்பது எப்படி இருக்கும் என்று அறிந்திராத ராஜகுமாரி கணவனோடு கைகோர்த்துக்கொண்டு செல்கிறாள் உள்ளத்திலே உவகை பொங்கப் புறப்படுகிறாள் என்று ராமாணம் சொல்கிறது. சீதையின் உன்னதமான காதல் வெளிப்படுகின்ற இடமாக இதைச் சொல்வார்கள்.

ராமன் கொடுத்துவைத்தவன், வேறென்ன சொல்ல. அழகிலும் குணத்திலும் நிகரற்ற மங்கை மனைவியாக கிடைத்தால் இன்பம், அதிலும் அவள் அளவற்ற அன்பைத் தருகின்ற காதலியுமாக இருந்தால் கேட்கவும் வேண்டுமா. அழகேயுருவான காதல் மனைவி அருகிருந்தால் வனவாசம் என்ன அஞ்ஞாதவாசமென்ன எல்லாமே பிக்னிக்தான்.

இந்தக்காலத்திலும் சீதைகள் இருக்கிறார்கள். மேக்கப்பிற்குப் பின்னால் ஒழிந்துகொண்டிருக்கும் அழகு சீதைகள், சௌகரியங்களுக்குப் பின்னால் வருகிற சாதுர்ய சீதைகள், "குணம் என்ன குணம்" சற்குணம் என்பதே ஆணாதிக்க கட்டுப்பாடுகள்தான் என்று அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து புதுமைப் பெண்ண்களாய் தம்மை காணும் மொடல் சீதைகள். காதல் என்கிற பெயரில் - என்னென்னவோ செய்கிற சீதைகள். இப்படியான சீதைகளால் துரத்தியடிக்கப்பட்டிருக்கிறாள் பெண்மையின் அடையாளமாகச் சொல்லப்பட்ட "சீதை". நாளுக்கு நாள் மாறிவரும் இன்றைய உலகத்தில், புதுமை என்று சொல்லிக்கொண்டு பெண்மையின் பண்புகளையே (Qualities of Women) இழந்துகொண்டுபோகிறாள் "சீதை".

-----------------

பிற்குறிப்பு :- ஒரு நான்கு நாட்களுக்கு முதல் இந்தமாதிரி ஒரு சீன் என் வாழ்க்கையிலும் நடந்தது!!!, என்னை பார்த்து ஒரு பொண் சொன்னாள் "நின் பிரிவினும் சுடுமோ, பெருங்காடு". இதை யாரும் நம்பப்போவதில்லை என்பத எனக்கு தெரியும்!!!. பிறகு "இன்றுபோய் நாளைவா" என நயம்படக் கொப்பியடித்து மாட்ட நான் என்ன 'வில்லிபுத்தூரார் ஆழ்வாரா'. அழகான, தெய்வீகமான "சீதையின் காதலை" ரசித்தேன், அதை பகிர்ந்துகொள்ள விரும்பினேன். எழுத்தில், சொல், பொருளில் குற்றமிருப்பின் இந்தச் சிறியவனாகிய அடியேனை மன்னிக்க.

- ப. அருள்நேசன்

Thursday, December 22, 2011

பிந்திய கனவுஎங்கேயோ
விட்டுவிட்டு வந்த
கவிதை ஒன்றை
நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்

நினைவை
கடந்து கடந்துபோய்
அதன் பொருளை
தேடிக் கண்டுபிடிக்கும்போது
வார்த்தைகள்
வேறெங்கோ பேசிக்கொண்டிருந்தன

இப்போதிருந்தே
ஆரம்பிக்கலாம் என்று
சொற்களை எடுத்தால்
அவை பொருள் மறந்துபோயிருந்தன

இப்படி
சொற்களுமில்லாமல் பொருளுமில்லாமல்
கவிதையொன்றை
எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்

Monday, June 13, 2011

சிறகு முளைத்த கனவுகள்


22 Nov 2010, என் வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத நாள். காதலைப் போல் ஓர் சுபானுபவம் அது. "நானும் வானில் பறந்தேன்". இதுவரை என் சிறகுகளில்லாக் கற்பனைகளிலும் கனவுகளிலும்தான் வானத்தில் பறந்திருக்கிறேன். இன்றுதான் எனக்கு வானம் வசப்பட்டது. பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வானுக்குப் பறந்தேன், பூமியைவிட்டும் இந்தப் பூமியின் சம்பிரதாயங்கள் முதல் எல்லாவிதமான சட்டங்களிலுமிருந்தும் விலகிக்கொண்டிருந்தேன். அதை நினைத்துப் பார்க்கும்போதே, அது சுகமா இல்லை றணமா என்று இன்னொருமுறை உணர்ந்துபார்க்க (மறுபடியும்) மனசு அங்கலாய்க்க ஆரம்பித்துவிடுகிறது.
வானத்தில் இருந்து குண்டுபோட, பங்கறுக்குள் (Bunker) ஒழிந்துகொண்டு மனசடைத்த றணங்களோடு பார்த்தோமே! அதேபோல் ஒன்றுக்குள், அதே உயரத்தில் நானும் பறந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது மனசில் றணம் இல்லை, அந்தக் குழந்தை வயதில் தவறிப்போன ஆச்சரியங்களும் மகிழ்ச்சியும் கொஞ்சம் எட்டிப்பார்த்தன எனக்குள். நான் கனவாய் படைத்த ஆச்சரியங்களை தொட்டுணர்ந்துகொண்டிருந்தேன். கனவுகளை நிஜமாய் படைக்கிறது விஞ்ஞானம்...எனக்கு இந்த நிஜத்தையாவது கனவென்று செய்துவிடாதீர்கள் என்று கெஞ்சிக்கொண்டிருந்தது ஒரு குழந்தை எனக்குள்

[22.11.2010] இன்று அத்தனை அதிசயங்களை அனுபவித்ததுபோல் ஓர் உணர்வு. வானில் பறத்தல் எனக்குச் சாத்தியமானது இன்றுதான். மனிதன் வானில் பறக்கத்தொடங்கி எவ்வளவோ காலங்களுக்குப் பிறகு எனக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது, நான் ரைட் சகோதரர்களை மிகக் கௌரவத்துடனும் மரியாதையுடனும் நினைத்துக்கொண்டேன். UL 207 விமானம், அதில் 25D எனது இருக்கை, அதில் போய் அமரும்வரை எந்தவிதமான ஆச்சரியங்களையும் நான் உணரவில்லை. முதன் முதலில் வானில் பறக்கிறோம் என்கிற ஆச்சரியங்களோ, தனியாக வந்திருக்கிறோமே என்கிற அச்சமோ, எதுவுமே ஏனோ அப்போது என்னிடமிருக்கவில்லை. சாதாரணமாக கொழும்பில் இருந்து புகைவண்டியில் ஏறி வவுனியாவிற்கு கிளம்புவதுபோலவே உணர்ந்தேன்.

விமான நிலயத்திலும், வளமைபோல ஒரு ஒன்றரை மணித்தியாலங்கள், நான் கிளிநொச்சியில் இருந்து வந்தவன் என்பதை எனக்கு உணர்த்தினார்கள். அது மகா பாதகமான குற்றம்தான், அந்தப் பாவச்செயலை இன்னொருமுறை நான் செய்யமாட்டேன் என்று கொஞ்சம் பாரதி மொழிகலந்து சொன்னேன். பாவம் அவர்கள் கருவிகள், ஆட்டிவைக்கும் கடவுள்களின் சீடர்கள். அந்தக் கருவிகள் தமது வேலையைச் செய்தாலும் என்னோடு மிகக் கனிவுடனேயே (நான் ஒரு டெரரிஸ்ட் இல்லை என்பதை உறுதிப்படுத்தியபிறகுதான்) நடந்துகொண்டார்கள். எனது சாத்தானின் கருவிகளிடமும் கனிவிருக்கிறது. அவர்களில் ஒரு அம்மையாரின் வார்த்தைகள் கோபத்திலிருந்து இறக்கி பளையபடி சமதரைமீது விட்டது, " பரிசம ஜன்ன புத்தா" (கவனமாய் போய் வா மகனே). அவர்களின் சூள்நிலையை புரிந்துகொள்ளாமல் அவர்களோடு கனிவாக நடந்துகொள்ளாதையிட்டு பின்பு நான் வருத்தப்பட்டுக்கொண்டேன்.

விமானத்தின் ஆசனத்தை சென்றமர்வதற்கு முன்பே, என் தொலைபேசியின் மிச்சமிருந்த பற்றிச் சார்ச்சை (Battery charge) தீர்த்துவிட்டு, பிறகு அபுதாபி எயர்போட்டில் நின்று வருத்தப்படுவேன் என்பது எனக்கு முதலிலேயே தெரியும். அவ்வாறு நடந்துகொண்டதால் பலதடவைகள் சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்தாலும் இந்தப் பளக்கத்தை மட்டும் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.

மெல்லிய ஏஸி (A/C) குளிரில் முதன்முதலில் எயர்போட்டை (Airport) ரசிப்பதற்குப்பதில், தொலைபேசியில் ஓர் யௌவன மங்கையின் குரலை ரசித்துக்கொண்டிருந்தேன்.நான் துறவிகளைப் போல் பற்றற்றவனோ பறவைகளைப்போல் இலக்கற்றவனோ கிடையாது. ஆனாலும் இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் கலந்தவன். இன்றைய நாளை அதிகம் ரசிக்கிறேன் அவ்வளவுதான். நேற்றென்பது இறந்தகாலம், நாளைக்கு... என்பது நிச்சயமற்றது என்பதுதானே யதார்த்தம். விமானம் கிளம்புவதற்கு முன்னதாக, மிச்சமாயிருந்த என் அரைமணிநேரத்தை சிக்கனமாய்ச் செலவுசெய்துகொண்டிருந்தாள் ஒரு சிம்ரெல்லா. கரிசனம், சில்மிஸம், காதல் இவைகளோடு இடையிடையே கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் சிரிப்பு - இவைகளை ஓவ்வொரு சொல்லிலும் மாறிமாறி சிந்திக்கொண்டிருந்தது அந்தக் குரல்.
"கட்டாயம் போகவேணுமா?...
நீ வரும் வரை காத்திருப்பேன்!...மறந்திடுவியா?...உனக்கு கவலையாய் இல்லையா?...உனக்கு எந்த பீலிங்ஸும் இல்லையா...போடா நீ கள்ளண்டா! - டைரெக்ஸன் (Direction)...ஃம்யூஸிக் (Music) இல்லாமலே ஒரு சினிமா ஓடிக்கொண்டிருந்தது. அவள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களாயிருந்த என் சிரிப்பை, நக்கலை, சில்மிஸச் சீண்டலை செல்லமாய் கோபித்துக்கொண்டு "இன்னும் உன் பயணத்தை பற்றி அக்கறையில்லாமலிருக்கிறாய்" என்று சொல்லி ஒரு குட்டுவைத்தாள். அதுகூட அவ்வளவு சுகமாயிருந்தது அப்போது எனக்கு. குட்டு வைப்பதென்ன, முத்தங்கள் ஸ்பரிசங்கள் தீண்டல்கள்... தீண்டாமை, அணைப்பு சிலிர்ப்பு...இப்படி எல்லாப் பரிமாறல்களையும் டெலிபோனுக்கூடாகவே செய்துவிடலாம். அது காதலர்களுக்கு மட்டும் ஃக்ரகம்பெல் சொல்லித்தந்த விஞ்ஞானம் . கிளம்பும் நேரம் வந்தது, அவளை பிரியும் நேரமும் வந்தது, ஐ லவ் யூ டா... ஐ வில் மிஸ் யூ வெரிமச் பேபி, இறுக்கி அணைத்து ஒரு முத்தம் - அந்த தொலைபேசி உரையாடல் நிறுத்தப்படுகிறது. நான் தொலைபேசியை அணைக்கமுதல், அவளிடமிருந்து எஸ்.எம்.எஸ்

"ஒரு ராட்ஸசன் என்னிடம் வரம் கேட்டான்
நானும் எல்லாச் சம்மதங்களுடனும் தந்துவிட்டேன் - என்னை
அவன் அவஸ்த்தைகள் செய்ய. . ." மிஸ் யூ டா ராஸ்கல்!

நான் என் நாட்டை பிரிவதில் மகிழ்ச்சிதான் அதிகமாக இருந்தது, அந்தளவுக்கு வெறுப்பை தந்திருந்தது இந்த நாடு எனக்கு ( எமக்கு). விமானத்தின் வாசலில் நின்று, 'தொலஞ்சுபோ என் நாடே!' என்று மனசுக்குள் நினைத்துவிட்டு திரும்பினேன். பிளாஸ்திரிப் புன்னகையோடு "சிங்களப் பொண்ணு" (எயர் கோஸ்டர்ஸ்), இதயத்தை சுட்டு இரத்தத்தை காய்ச்சும் குரலில் - இருகை கூப்பி "ஐபவான்" என்றாள். உடனே மனது மாறிவிட்டது, திரும்பிப் பார்த்துச் சொன்னேன் - விரைவில் திரும்பி வந்துவிடுவேன் என் நாடே. என்ன ஆனாலும் தாய்நாட்டை மறக்கலாமா, சொர்க்கமே ஆனாலும் நம் நாடு போல் வருமா, நம் நாட்டுப் பிகர்'ஸ் போலவருமா! . சிகப்புத்தோல் வெள்ளத்தோல் - எல்லாம் வெண்டைக்காய். நம்ம நாட்டுப் பொண்ணுகள் எல்லாமே தேனும் + பாலும் கலந்து செய்த தேர்கள். தெருவில் அவளுகள் நடந்தால் - திருவிழா. சிரித்தால் - தீபாவளி. பார்த்தால் - பங்குனித் திங்கள், பேசினால் - தேசிய விடுமுறை. பார்த்த கண்கள் கனவென்று பொய்சொல்லும் , மனசுக்குள் யுத்தமொன்று மூளும். நிஜத்தில் ஒருபக்கம், கனவில் ஒருபக்கமாய் வந்து ஆக்கிரமித்து அரசாளும் பெண்மை - எங்களூரில்தானே இருக்கிறது. ஆனால் எல்லா யுத்தத்திலும் ஆண்களை வென்று காதலுக்கு வைப்பாளுகள் பாருங்க ஆப்பு...அதிலும் அவளுகளை அடிச்சுக்கவே முடியாது. அவளுகளை எல்லாம் விட்டுவிட்டு எப்படி இன்னொரு நாட்டுக்கு போவது என்று நினைக்கும்போதுதான் மனசு வலித்தது. என் இளமைப் பருவத்தில் நம் நாட்டு பொண்ணுகளை பிரிஞ்சு இருப்பதென்பதைவிட கொடுமை என்ன இருக்கமுடியும் சொல்லுங்கள்.

இப்படித்தான், பெண்களை இத்தனை வர்ணிப்புக்களுடன் ஒரு காட்சிப் பொருள் போல பார்க்கிறது எமது சமுகம்
மேலும் அப்படியே பாவிக்கிறது. ஆனால் அதை அவர்களால் கூட புரிந்துகொள்ளமுடியாதபடிக்கு சமுகக் கட்டமைப்புக்கள் ஆழமாகவும் மிகப் பலம்பொருந்தியதாகவும் அமைக்கப்பட்டுவிட்டன. மேலைத்தேச நாடுகளின் கலாச்சாரங்களை பழித்து அல்லது அசிங்கமாய்ச் சித்தரித்து தனது கலாச்சாரத்தை நியாயப்படுத்தியும் புனிதங்களைச் சோடித்தும் வைத்திருக்கிறது எனது சமுகம். கண்ணகியை மேன்மைப்படுத்த மாதவி என்னும் பாத்திரத்தை உருவாக்கி அதை பழித்து அசிங்கப்படுத்தவேண்டியிருந்தது இந்தச் சமுகத்திற்கு. இப்படி தனது நியாயங்களை மிக ஆழமாகவும் அதை உடத்துவிட முடியாதபடி மிகப் பலமாகவும் கட்டப்பட்டிருக்கிற சமுகச் சித்தாந்தங்களின் அசிங்கங்களை, ஒழுக்கம் பண்பாடு கலாச்சாரம் என்பவற்றால் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறது இதச் சமுகம் (இவற்றைப் பற்றியெல்லாம் ஓஷோ "பெண்" (WOMEN) என்கிற புத்தகத்தில் மிக அழகாகப் பேசுகிறார், தைரியமானவர்கள் படித்துப்பாருங்கள்). அதைப்பற்றி எனக்கென்ன கவலை, ஆனால் நானும் இந்தச் சமுகத்தின் ஒரு பிரதி என்றெண்ணும்போதுதான் அவமானமாக இருக்கிறது. எனக்கு அடிக்கடி ஞாபகம் வருகிற ஒரு ஆங்கிலப் பாடல் இருக்கிறது...அதில் ஒரு வரி வரும், "நாங்கள் (பெண்கள்) ஆண்களின் கண்களுக்கூடாக இந்த உலகத்தை பார்க்கிறோம்...." என்பதாக, அந்தவரி என்னை மிகவும் வேதனக்குள்ளாக்குகிறது. உலகத்த்தில் எதேதோ உரிமைகளுக்காகவெல்லாம் போராடுகிறார்கள், மிக மிக அற்பமான உரிமைகளை கூட அவர்கள் விட்டுத்தர தயாராய் இல்லை, அதற்காக ஆயிரம் ஆயிரம் உயிர்களை இழக்கவும் தயாராய் இருக்கிறார்கள் தலைவர்களும் ஆட்சியாளர்களும். இது எப்படி இருக்கிறதென்றால் என் பக்கத்திலேயே ஒரு அடிமையை வைத்துக்கொண்டு என்னை ஒருவன் அடிமைப்படுத்த நினைக்கிறான் என்று மல்லுக்கு நிற்பதைப் போல் இருக்கிறது. அடிமைத்தனம் என்பதன் முழு அர்த்தம் எனக்கு புரியாதவரை எப்படி நான் என்னை அடிமைப்படுத்த நினைப்பவனோடு சமாதானமாக போக முயற்சிப்பேன். இன்றைக்கு, யேசுநாதர் கேட்டதுபோல் தன்மேல் குற்றமில்லாதவன் போர்க் குற்றம் சுமத்துங்கள் என்றால் ஆளாளுக்கு கற்களைப் போட்டுவிட்டு வரவேண்டியிருக்கும். இந்தக்கதை எல்லாம் எனக்கெதுக்கு, எனது விமானம் புறப்படத் தயாராகிவிட்டது.

புத்திசாலித்தனமாக சுர்றுமுற்றும் பார்த்து, எயர் கோஸ்டர்ஸ்
(Air Hostess) ஐ இழுத்துப் பிடிச்சு சத்தமில்லாமல் கேட்டும் நடைமுறையை ஓரளவு புரிந்துகொண்டேன். பெரிய பந்தாவாக இங்கிளீஸ் பேப்பரை எடுத்துப் புரட்டியபடி சுற்றியிருப்பவர்கள் எப்படி எல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பதை அவதானித்தேன். அதற்குள், விமானம் ஓடத்தொடங்கிவிட்டது. அது கொஞ்சம் வேகமாக... இன்னும்வேகமாக... மிக வேகமாக...அப்படியே திடீரென உந்தியெழுந்து காற்றில் மிதந்தது. உடனே குளந்தையாகி மனது குதூகலமானது, அச்சம் + ஆனந்தம் கலந்த உணர்வொன்றை அது கொண்டாடியது. கார்றில் பறவைகள் தத்தி விளையாடுவதுபோல அந்த விமானமும் தத்தி தத்தி மேலே மேலே ஏறியது, அது வானில் ஏறி சீரான வேகத்தை அடையும்வரை அந்த சுபானுபவம் நீடித்தது. அதற்குப் பிறகு ஒரு குருவி போல அது மலை உச்சி ஒன்றில் போய் இருந்துகொண்டதுபோல் ஓர் உணர்வு எனக்குள் படியத் தொடங்கியது.

கொஞ்சநேரத்தில், "வட் டூ யு டிரிங் சேர்?" என்று கேட்டபடி ரொலி நிறைய விதம் விதமான ஐட்டங்களோடு எயர் கோஸ்டர்ஸ் (Air Hostess) வந்தார்கள். பீர் அடித்ததினால் ஆகாயத்தில் பறந்திருக்கிறேன், ஆனால் இப்படி ஆக்கயத்தில் பறந்துகொண்டே ஆளாளுக்கு குடிக்கிறாங்கப்பா. 'இதெல்லாம் கூடாது, அதைவிட முதல்த் தடவை வான்பயணம் செய்கிறாய் டீஸண்டா நடந்துகொள்' என்று மனசுக்குள் ஒரு ஜெண்டில்மென் சொல்லிக்கொண்டிருந்தான். 'இறங்கிக் கொண்டாடீர்றா மாப்புள்ள இந்தமாதிரி சான்ஸை பயன்படுத்தணும்டா என்ஜாய் பண்ணு' என்று இன்னொரு கேடிப்பயல் உள்ள நச்சரித்துக்கொண்டிருந்தான். எழிமை, தாழ்ச்சியை போதிக்கும் கத்தோலிக்க மதத்தை தளுவும் என்னால் ஒரு (அப்)பாவி கேடிப்பயலோடு பகைத்துக்கொண்டு ஜெண்டில்மென்னோடு சிநேகம்வைத்துக்கொள்ள முடியவில்லை.

மதத்தின் கொள்கைகளை சரியான் இடத்தில் மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறேன் பாருங்கள். இதைவிட அசிங்கமாகவும் கேவலமாகவும் மதச்சித்தாந்தங்கள் பயன்படுத்தப்பட்டுவருவதை கண்டுகொள்ளாதவர்கள், என்னை மட்டும் சிலுவையிலா அறைவார்கள்?. என்ன, நியாயப்படுத்தல்களின் பலம் அதிகரிக்கின்றபொழுது சொல்லப்படுகின்ற எதுவும் உண்மை என்றாகிவிடுகிறது. உண்மை என்பது கூட என்ன , ஒரு விடயத்தின் அல்லது, செயலின் பொருளின்...இன்னும் சொல்லப்படுகிற ஏதேனுமொன்றின் எதிர்வாதங்கள் தோற்றுப்போய் அதன் மீதான நியாயங்கள் வலுப்பெற்றிருக்கிற நிலைதானே. மதம் என்பதும், மதச் சித்தாந்தங்களும் நியாயங்கள் வலுப்பெற்ற நிலைதான். இங்கே நான் கடவுளை பற்றி எதுவும் சொல்லவில்லை, பிறகு ஆகாயத்தில் அந்தரத்தில் பறந்துகொண்டு எவனாவது நாத்திகம் பேசுவானா?..ஆசனப் பட்டிகளை சரி செய்யுமாறு அறிவிப்பு ஒலிபரப்பப்பட்டது, இன்னும் சில நிமிடங்களில் இந்த விமானம் கீழ்நோக்கிப் பறந்து தரையை பத்திரமாகச் சென்றடையும் என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது.

தரையிறக்கம் (Landing) அவ்வளவு மகிழ்ச்சியைதருவதாக இருக்கவில்லை, மாறாக மிகக் கொடுமையான தலைவலியை அனுபவித்தேன். விமானம் தரையை வந்தடைந்ததும், ஆகாயப் பயனத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட பெருமிதத்தோடு அபுதாபி மண்ணில் கால்வைத்தேன், அபுதாபி எயர் போட், "இதுக்கு சிறீலங்கா தங்கம்" . அப்பவே முடிவெடுத்துவிட்டேன் திரும்பிப்போகும்போது, மகிந்தராஜபக்ஸ செய்ததுபோல விழுந்து தாய்நாட்டை முத்தமிடவேண்டும் என்று.

வீஸா பதிவதற்கு தாமதமாகிவிட்டதால்... அவசரமாக வெளியே போவோம் என்று பாதையைக் கடந்தால் மறித்துவைத்து எனக்குப் புரியாத மொழி ஒன்றில் விளக்கம் வைக்கிறார் அங்கு வேலைபார்க்கும் ஒருவர், நான் தவறான பாதையில் நுளைந்துவிட்டேன் என்பதை புரிந்துகொண்டு சரியான பாதையை கண்டுபிடித்து வெளியே வந்துவிட்டேன். அதைவிட நான் டென்சனானதை எனக்கே காட்டிக்கொள்ளாமல் வெளியே வந்துவிட்டேன் என்பதுதான் ஆச்சரியம். கீளைத்தேச நாடுகளுக்கான ஒற்றுமையை என் முதல் வெளிநாட்டுப் பயணத்திலேயே புரிந்துகொண்டேன். அங்கே எனக்காக தயா அண்ணா காத்திருந்தார் அவருடன் சர்வா அண்ணாவும் வந்திருந்தார். எனது இந்த முதல் வெளிநாட்டுப் பயணம், பஸ் பிடித்து ஊருக்குப் போவதைப் போல ஜாலியாக இருந்ததற்கு காரணம் தயாண்ணாதான். பொறுப்புக்களை சுமக்கிற வரையில்தானே நின்மதி தொலைந்துவிடுகிறது, அந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றிவிடுவதற்கான சவால்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதால் வேறெதையும் எம்மால் ரசிக்கமுடியாமல் போய்விடுகிறது, அதனாலேயே மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. நான் விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு ஆவன செய்வதற்காக தயா அண்ணா காத்திருந்தார், அதனாலேயே என்னுடைய பயணத்தை என்னால் அனுபவிக்க முடிந்தது, ரசிக்க முடிந்தது.

கொஞ்ச நாளில் இந்த நாடும் ஊரும் பளக்கப்பட்டுவிட்டது, கம்பஸ் சீனியர் அண்ணாக்கள் என்னோடு மிகவும் அன்பாக இருக்கிறார்கள். இங்கே என்னை ஒரு பத்தாம் வகுப்புக்குள் நுளைந்திருக்கிற சின்னப் பையனைப்போலவே நான் உணர்கிறேன், காரணம் இந்த சமுகத்திற்குள் நான் புதியவன். நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறையவே இருக்கிறது. நான் தரையிறங்கியிருப்பது புதியதொரு தேசத்தில் மட்டுமல்ல, வாழ்வின் புதியதொரு அத்தியாயத்திலும்தான்.