Saturday, September 13, 2008

மறு அழைப்பு - சிங்களத்திலிருந்து

ஐ.நா வே வெளியேறு
ஆட்டு மந்தை போல்
மனித உயிர்
வேட்டையாடப் போகிறோம்

களவு களவாய்
கொன்று - அந்த
ருசி வேகம் கொண்டுவிட்டோம்
பொய்யாடை களைந்து
மெய்யாகவே மேயப்போகிறோம்
புரிந்துகொண்டு விலகிவிடு

புலி வேட்டை என்று போய்
எம்மையே பலிகொடுத்த
பாவம் கழுவப்போகிறோம்
கொஞ்சம் கொஞ்சமாய்
தின்று - தமிழனுக்கு
துயரம்தான் கொடுத்தோம்
இப்போதாவது
நின்மதி தர இடம்விடு
நித்திய அமைதி
அவன்
நேசித்த நிலத்திலேயே
நீறாகட்டும்

இதுவரை யாரும் செய்யவில்லை
சாட்சியத்தை அகற்றிவிட்டு
சத்தமில்லாமல்
முழுத் தமிழனுக்கும்
சங்கூத
யாருக்கும் தோன்றவில்லை

நாங்கள் செய்யப்போகிறோம்

வெள்ளைத்தோல் தோழா
அடிக்கடி நீ
எம் கள்ளம் கண்டுபிடிக்கிறாய்
நாய்க்குட்டி புண்பட்டாலே
அழுகிறவன் நீ
இந்த அக்கிறமங்கள்
சகிக்காது உனக்கு
அங்கிருந்து வந்துவிடு
சாராயமும் சொகுசு வீடும்
தருகிறோம்
இங்கிருந்து
எங்கள் கத்திக்கு காவலிரு
கொஞ்சக்காலம்

Thursday, September 4, 2008

கடவுள்க் கல்


எங்களுக்கு
எதற்காக கனவுகள்
இன்றைக்கோ நாளைக்கோ
அல்லது இன்னுமொரு பொழுதில்
உதிரப்போகிற
கடைசி மூச்சை காப்பாற்றும்
வல்லமை கூட
கிடையாது எம்மிடம்
பசிப்பதும்
வலிப்பதும் கூட
நியாயமற்றதாகிப் போனபிறகு
படிப்பும்
பலவர்ணக் கனவுகளும்
எதற்காக,
எங்களுக்கே இது
வேடிக்கைதான் - இருந்தும்
வருகிறதே என்ன செய்வது

உலக நியதிகளும்
சட்டங்களும்
எங்களையே கடிந்து கொள்கிறபோதும்
கடிவாளம் போடும் போதும்
கனத்து வருகிற
வேதனைகள்
கொட்டித் தீர்க்க இயலாது
கடவுள்க் கல்லையே
கழுவிப்போகிறது

காலம் எங்களை
எழுதாது போயிருக்கலாம்
ஏனோ
ஒரேயடியாக
அழிக்கக்கூடத் தெரியாமல்
சொட்டு வைத்துக்கொண்டு போகிறது
பொருளற்றுப்போன
வாழ்வை - சாவு
சப்பித்துப்பிக் கொண்டேதான் இருக்கிறது
எங்களுக்கான
கருணைப் படகை
நாங்களே செய்தாலும்
அவற்றை விழுங்கும்
பூத டோறாக்களும்தான்
படைக்கப்பட்டிருக்கிறதே...
அவற்றிலிருந்து மீண்டு
தப்பித்தாலும்
இந்தப் பூமியில்
எம்மைத் தாங்கும்
சுதந்திரமான
கரை ஒன்றிற்கு
நாங்கள்
எங்கே போவது...

Monday, September 1, 2008

இரண்டம் முகம்


தூக்கம் தொலைந்த
இரவொன்றில்
தலையணைக்குள் புரண்டு புரண்டு
அடம்பிடிக்கிறது கனவு
இருளின் கர்ப்பத்தில்
பிரசவம்பார்த்தவள்
போதாதென்று துப்பிவிட்டுப்போன
வெளிச்சம்
கசிந்து பரவுகிறது அறைக்குள்ளும்...
மனசுக்குள்
இனம்புரியாத அமழி
நிரவ
காதுகளில் அறைந்துகொண்டிருந்த
நிசப்தத்தை பிடுங்கிச் செல்கிறது
செல்போனில் கூவும் சேவல்

வழக்கம்போல
தூங்காத எனது
இரவை சுருட்டிக்கொண்டு
விடியாத நாள் ஒன்றுக்குள்
பயணிக்கத் தொடங்குகிறேன்...
நேற்றய கனத்தின்
மிகுதியை இறக்காமலே
இன்றைக்கான
பொழுதின் தேவைகளையும்
சுமந்துகொண்டு...