Saturday, October 18, 2008

“ஹலோ”


அன்றொருநாள் பூக்கள் பனித்துளிகளில் முகம் பார்த்து அலங்காரம் செய்யத் தொடங்கும் நேரம், நானும் அம்மாவும் தெரியாத தேசம் ஒன்றின் தொலைபேசி அழைப்புப் பொன்றுக்காய் காத்திருக்கின்றோம். அம்மாவுக்கு பழகி மறந்து போன ஆண்டுகளின் தூரம் பதினாறு. எனக்கோ எல்லாமும் புதிது, அன்று அலர்கிற அழகிய மொட்டைப் போல அதிசயமாய் எல்லாவற்றையும் பார்த்தபடியிருக்கின்றேன். நான் டெலிபோன் வயர்களுக்கூடாய் என் குரல் எப்படிப் போகும், பின்பு காற்றில் மின்காந்த அலைகளாய் பயணிக்கும், இப்படி நான் ஏட்டில் படித்த தொலைபேசியை வியந்து கொண்டிருக்கின்றேன். எப்படிச் சொல்வது உங்களுக்கு இது எனக்கு முதல் தடைவை. ஆச்சரியம், சந்தோசம் இவைகளையும் தாண்டி வெட்கம் நிரம்பி வழிந்து நான் கதிரையின் ஓரத்திற்கே வந்துவிட்டேன். கடைக்காரர் குரல் கொடுத்து என் நாடித்துடிப்பை இன்னும் அதிகரித்து உச்சத்தில் வைத்து விட்டார், “புஸ்ப்பவதி யாரு, உங்களுக்கு Call”! அம்மா எழுந்து சென்று Receiver ஐ எடுத்து காதுக்குச் செருகும் வரை என் இருதயம் அடிக்கவில்லை, மூச்சு வாசலும் அடைபட்டுவிட்டது. இதென்ன பூமி இயங்கவேயில்லை எனக்கு. அம்மா என்னிடம் Receiver ஐத் தரப்போகிற நிமிடத்தின் கனம் என் வயசுக்கு சுமக்க முடிந்த அதியுச்ச கனமாயிருந்தது. அப்போது தான் அம்மாவின் அந்த வார்த்தைகள் தொலைபேசி வயருக்குள் நுழைந்து கொண்டிருந்தது, “என்ர மகன் நிற்கிறான் கொஞ்சம் கதையுங்கோ” நான் புரியாதது போல் யார் என்றேன்! அம்மா, மாமா கதை என்றார். நானும் எழுந்து சென்று காதுக்குள் ரிசீவரைச் சொருகியபடி “ஹலோ” என்றேன்.

ஹலோ, இந்த Greating words இன் அர்த்தம் How long என்றும் அதன் திரிபே “ஹலோ” ஆக மாறியிருப்பதாக அறிந்திருக்கின்றேன். ஆரம்ப காலத்தில் சுரங்கத் தொழிலாளிகளிடம் அதிகாரிகள் பேசும் போது How long என்ற வார்த்தையை உரக்க கூறுவார்களாம் அது அவர்களுக்கு “ஹலோ” என்று கேட்கவே இந்தச் சொல் தோன்றியாக ஒரு சுவையான கதை ஓன்றும் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இப்போது இந்த வார்த்தையை கனடாவில் இருக்கும் எனது மாமாவிடம் நான் கூறுகின்றேன். அவருக்கு அந்த வார்த்தை அவரை விழிப்பதாக தோன்றியிருக்கும். எனக்குள்ளேயே அதன் அர்த்தம் இப்படியாக இருந்தது.
“மாமா எவ்வளவு தூரமாகிவிட்டோம் நாம்” உறவிலும் சரி, பூமியின் மேற்பரப்பிலும் சரி, நாம் எட்டமுடியாத் தூரம் என்பதைச் சொல்வதாய்ப்பட்டது எனக்கு. முதன்முதலில் தொலைபேசியில் ஹலோ என்ற விழிக்கும் சொல்லை அதன் உண்மை அர்த்தத்தோடு சொன்ன பெருமை எனக்குள்ளே செல்லச் சிரிப்பொன்றை உதிர்த்து அப்போது.

மாமா சில வார்த்தைகள் பேசினார். எல்லா அறிதலின் பொருட்டு என்னிடம் தொடுக்கப்பட்ட கேள்விகளாயிருந்தன. எனது பதில்கள் இருக்கிறம் சுகம், ஓம் என்கின்ற ஒற்றைச் சொல்லாயிருந்தது. முதல் தடவை பேசுவதால் மிகுந்த அன்பை அவரிடம் நான் உணர்ந்தேன். அவர் சில வாக்குறுதிகளை என்னிடம் முன்வைத்தார். அம்மா நமக்கு இவ்வளவு அன்பான நல்ல உறவுக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்களா? அம்மாவின் முகத்தை பெருமையோடு பார்த்தேன். “சே.. இத்தனை நாள் தவறி விட்டோமே, இழந்த அன்பை சுவைத்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள, என்று என் குழந்தை மனம் நொந்துகொண்டது, யதார்த்தங்கள் புரியாத அந்த பதினாறு வயது.

மீண்டும் அம்மா பேசிவிட்டு மாமியுடன் கதை என்றார். அந்தப் புகைப்படம் என் நினைவை சட்டென்று ஆக்கிரமித்தது. குண்டா சிவப்புச் சேலையில் அவங்களா?, கையில் ஒரு குழந்தை (தெரியாத என்ன) யாருக்கும் தெரியாமல் நான் அடிக்கடி ரசிக்கும் என் சின்ன தேவதை. என்னுடைய மச்சாள். வெள்ளை அடுக்குச் சட்டையில் பளீர் எனச் சிரிக்கும் சிம்ரெல்லா. இப்ப எப்படி இருப்பாள். வளர்ந்திருப்பாள். என்னை மாதிரியே பேசுவாளா? நான் எப்படிப் பேசுவது?
இப்படி நீளும் என் கனவுகளை இழுத்து நிறுத்தியது என் மாமியின் “ஹலோ” நானும் பதிலுக்கு “ஹலோ” என்றேன். எப்படி இருக்கின்றீர்கள்? என்றார் அவர். என் மூளையில் சட்டெனத் தோன்றி பட்டெனப் போட்டு உடைத்தேன் அந்த வார்த்தைகளை “உங்களுக்கு எங்களைத் தெரியுமா” இதயத்தில் இருந்து அறுந்து விழுந்தது வார்த்தை. மாமியும் இந்தக் கேள்வியை கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் சற்று தடுமாறி, “போட்டோவில் பார்த்திருக்கிறேன்” என்றார். அப்போது என் இந்தக் கேள்வியைக் கேட்டேன் எனத் தெரியவில்லை அவர்களும் நம்மைப்போல், எம்மை நினைப்பார்களா என்று அறியும் ஆவலா, இல்லை பிரிந்திருக்கின்றோமே நாம் உறவுக்காரர்கள் தெரியுமா? என்று சொல்வதாக இருந்திருக்கலாம்.

மீண்டும் இன்னொரு தடைவை நான் பேச அழைக்கப்பட்டேன். இம்முறை நிச்சயம் அவள்தான். எனக்குள்ளும் இரகசியம் தந்தவள். ஐந்தாம் வகுப்புப் படிக்கும் பொழுது மச்சாளின் பெயரைச் சொல்லிக் கிண்டல் பண்ணும் போதெல்லாம் எனக்கும் ஒரு சின்ன இராட்சசி மச்சாள் இருக்கிறாள் என்ற கௌரவம் தந்தவள் அவள்தான்.

“தம்பி அணுக்குட்டியோடை கதை” உறுதிப்படுத்தினாள் அம்மா. அனுஷா என்கிற எனது மச்சாளின் பெயரை வெட்டிக் குறைத்து கவர்ச்சியாய், நாவுக்கு இனிப்பாய் சொன்னாள் அம்மா. அட எனக்கும் இந்தச் செல்லப் பெயர் பிடித்திருந்தது. “ஹலோ” அந்தக் குரல் என் இருதயத்தில் தபேலாவும், நரம்புகளில் கிற்றாரும் வாசித்தது. அதற்குப் பிறகு எமது குரல்களில் எனது அம்மாவும், அவளது அப்பாவும் பேசினார்கள். வாலிபர்களுக்கு நடந்து விடக் கூடாத கொடுமை இது. இறுதியாக நாம் பரிமாறிக் கொண்ட வார்த்தை நல்லாப் படியுங்கோ! நீங்களும் நல்லாப் படியுங்கோ!

Sunday, October 12, 2008

விடுதலை வானம்

கொடியில் படபடக்கிறது
மனவசின் சல்லடைகள்
கனவிற்கும் நிஐத்திற்குமாய்
இடம்பெயர்ந்துகொண்டு – புத்தகத்
தாள்களைத் தட்டுகிறேன.
நாளைய 9.00 மணி
புகையிரதச் சத்தம்
இருதயத்தின் தொலைவில்
கேட்கிறது.
தொலைவானில் இன்னொரு
விடுமுறைச் சிறகுகள் கட்டவிழ்கின்றன.

இன்னும் ஒரு வருடத்திற்கான
அன்பை – அம்மாவின்
மடியில் தலைசாய்த்து
ஸ்பரித்துக் கொண்டிருக்கின்றேன்
பிரிவு இயலாமையின்
குரல் ஒன்று
ஒப்பாரிக்குத் தயாராகிறது

அறையின் உட்புறமாய்
தட்டுகிறது கடிகாரம்
சில மணிகளை பாய்ந்து கடந்து
நிஐத்தில் மீழ்கிறேன்
இன்னும் பாதை திறக்கவேயில்லை.
மீண்டும் அப்பிக்கொள்கிறது
வீடு செல்ல இயலாத் துயரம்

யன்னலைத் திறந்து
நுளையும்
என் பார்வையில்
மழை நனைத்த
செடிகளிலிருந்து
உதிர்ந்து கிடக்கின்றன
என் புன்னகைகள்