Friday, February 13, 2009

காதல் நடந்த சுவடு


பதினாறு வயது, அந்தப் பருவம் பருகப் பருக விடாய் எடுக்கும். தனிக்கத் தனிக்கத் இனிக்கும். தவமிருந்தாலும் ஒரு சொட்டும் கிடைக்காத தேவாமிர்தம் அந்த நாட்கள். இளமை, அதன் முதற் பகுதி எனக்குள் உணர்வெழுதிப்போன சுவை, தடவிப் பார்க்க தளும்புகளாய் கூட இல்லை இப்போது என்னிடம்.

உணர்வுகள் சுரந்து சுகம் நிரம்பி வழிந்த தேகத்துக்குள் திட்டுத்திட்டாய் கனவுகள்.

கடவுள் பத்திரம் என்று சொல்லித்தான் கொடுக்கிறான் வாலிபத்தை, சிலர் அதை திறந்தே பார்ப்பதில்லை, வாழ்வு தொலைந்து விடுமோ என்கிற பயத்தில். அந்த உனர்வுகள், அடக்கி அடக்கி வைத்து.... பின்னொரு பொழுது உடைத்து வெளிவரும் கேவலமான பெயரோடு. இன்னும் சிலர், பொக்கிசம் கிடைத்ததென்று அதிலிறங்கி ஆடி அடங்குவர்.

பகுதி 1

என் கையிலும் வாலிபம் கிடைத்தது. அதை திறக்கிற துணிவு கூட இல்லை அப்போது என்னிடம். ஆனாலும் திறந்து பார்க்காமலுமிருக்க மனம் கேட்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அடியெடுத்து வைத்து கதவுவரை வந்தாயிற்று. கூச்சம், வெட்கம், பயம் இன்னும் தயக்கமும் கூடவே என்னோடு வந்தன. என் கழுத்துப் பிடியில் வாலிபத்தின் முன்னோடிகள் - ஹோமோன்கள் சொல்லச் சொல்ல துணிந்தது மனம். மெல்ல நிமிர்ந்து அவள் முகம் பார்த்தேன், திறந்தது கதவு. அவள் கண்களைப் பார்த்தேன், பிறந்தது காதல்.

காதலினுள் காலடி வைக்க வைக்க வானமும், பூமியும், பூக்களும், நதியும் அழகயிற்று. பகல்கள் எல்லாம் அவள் வருகைக்கான காத்திருப்பாயின. இரவு வந்ததும் அந்த இருட்டில் ஒழிந்துகொண்டு நிலவில் அவளை வரையத்தொடங்கினேன். நிலவு கவிதையாயிற்று. நீரும் நதியும் சங்கீதமானது. அவள்- அந்த தேவதை என் வாலிபத்தின் இளவரசியானாள்.

பகுதி 2

காதல் பாடம்
ஆயிரம் கோடி பழைமையான பூமியில் அதே வயதான காதலை இந்தப் பூமி - தன்மீது எழுதிவைத்த ஈரமான வார்த்தைகளால் எனக்கு அறிமுகம் செய்தது. அமீபா என்கிற ஒற்றை எழுத்தால் எழுதப்பட்ட பூமிதான் இன்று மேனிமுளுக்க உயிராயிருக்கிறதுகாதல்

காதலுக்கு
வயது, கண், மொழி, மதம்
இப்படி,
கிடையாது என்று அடுக்கப்பட்ட
சொற்களுக்குள்
எதுவுமே கிடையாமல்
வெறுமையின் விலாசமாக
இல்லாத்தன் இருப்பாக
இருக்கிறது காதல்

கடுகளவு தடையங்களையும்
காட்டாமல்
காற்றுக்குள் மணம் போல
கலந்திருக்கிறது காதல்

சிலவேளை
இல்லாத வானுக்கு
நிறம்போல
வண்ணம் பூசி
மனசில் முகம் காட்டுகிறது
காதல்

இப்படித் தொடர்ந்த பாடத்தில், என்னிடமிருந்த உனக்கான முகவரி

பதினாறுவயது
பருகிய விழிகளில்
இயற்கையில் பாடம் படித்து
நரம்புகள் வடம்பிடிக்க
சவாரிசெய்த
கனவுகளின் - நிஜக் கனவே
நீ

அப்படியே கனவு போலவே
இருந்தாயா - நீ
இல்லை என் கனவை
திருத்திக்கொண்டேன்
உன்னைப் பார்த்து,
உன்னளவிற்கு அழகியல்
வசதி போதாது
என் கனவுகளுக்கென்று

பகுதி 3

எனக்குத் தெரியும், மோகினிகள் கூட தேவதைகளாக சித்தரிக்கப்படும் வாலிபம் மாய மனச்சோலை என்று. இவள் வேறு சிதையாத சித்திரம். கனவில் இருந்து நிஜத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிம்ரெல்லா. எப்படி இரண்டு விழிகளில் இந்த அழகை ஏந்துவது. பார்த்த பார்வையில் உள்ளே குத்தி இற ங்கி உயிருக்குள் உளவுபார்க்கிறது இரண்டு கருவிழி நிலவுகள். வானுக்கும் தரைக்குமிடையில் ஆதாரமில்லாமல் அலைகிறது மனசு. நாடி நரம்புகளில் அவசரத்தந்திகள் அடிக்கடி பறக்கும்

இத்தனைக்கும் காரணம் அவளும் என்னைப் பார்த்தாள்

என் கிறுக்கல்கள் கவிதையாய் மறுபிறப்பெடுத்தன. என்னக்குள்ளும் சுரந்தது இசை. நானும் கவிஞனாகிவிட்டேன், இல்லை இல்லை என்னையும் கவிஞனாக்கிவிட்டாள் ஒரு தேவதை. அந்தப் பார்வையை இப்படி எழுதினேன்.

"சொட்டுகிற மழை
கிழியாத வானம்
எப்போதும்
தொலைந்து கொண்டேயிருக்கிற
முகில்கள்
வானத் திரையில்
நட்சத்திர ஆணிகள்,
அடித்து மாட்டிய
நிலவின்
நகரும் சித்திரம்
அத்தனையும் அழகாயிற்று
உன் ஒரே பார்வையில்

எப்படிச் சொல்ல
என் கண்மணிக்குள்
நீ செய்த கதிரியல்
வைத்தியத்தை
என் நரம்புகளுக்குள்
என்னென்ன
இரசாயனம் கலந்தாயோ
மேனிப் பரப்பெங்கும்
ஒராயிரம்
மின் அஞ்சல்கள்"

பகுதி 4

காதலுக்கு வயது - ஒன்பது.
[ஆண்டுக் குறிப்பிலிருந்து]
1999 காதல் ஜனனம்
2000
2001 பார்வைகளோடும் கனவுகளோடும்
2002 காதல் வளர்ந்து எனக்குள் மரமாகி
2003 எம்மை பிரிக்கவந்த சாத்தான் கல்லூரி இருதிப் பரீட்சை. நம் கல்லூரியின் இறுதி பிரியாவிடை ஒன்றுகூடல் அழைப்பிதளில் நான் எழுதியது எம்மையும் குறித்துத்தான்.

"கண்களில்
கோடி கனவுகள் சுமந்து
கூண்டை விட்டு
கலைகிற (கலைக்கப்படுகிற)
கல்லூரிப் பறவைகள் நாம்
பிரிந்துசெல்கிறோம்"

"கலைக்கப்படுகிற" என்றுதான் எழுதிக்கொடுத்திருந்தேன், அதை திருத்தித் தருமாறு மீண்டும் என்னிடம் அனுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலாகவே " கலைகிற" என்ற சொல்லை சேர்த்திருந்தேன்

உண்மையில் நாம் கலைக்கப்படோம், நட்போடும் காதலோடும் சேர்த்து. அதுதான் நமக்கான இறுதி நெருக்கம். அதற்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் என்னில் இருந்து தூர விலகிக்கொண்டேயிருந்தாய் நீ. பிறகு காலச் சுழலில் அகப்பட்டு நீயும் நானும் ஏதேதோ திசைகளில் வீசப்பட்டோம். அங்கேயே நின்றுவிட்டது எனது உலகம்.

அதற்குப் பிறகு, கொஞ்ச நாள், பிரிவுத்துயரில் பிடிபட்டு... ஞாபகங்களை பிரியமுடியாமல்... கொஞ்சம் மறந்து, கண்கள் பனிக்கும் நினைவுகளுடன் அவ்வப்போது...

அப்போதெல்லாம் எழுதியது
1
யாருமே இல்லாத
ஒரு உலகத்திற்கு
என்னை கைபிடித்து
அழைத்து வந்துவிட்டு
பாதியில் மறைந்துவிட்ட
பரலோக தேவதையே
என் மீதி வழி சேர்வதெப்படி
இல்லை
இங்கிருந்து மீழ்வதெப்படி

2
பருவகாலம்
தீர்ந்தபின்
திரும்புகிற பறவை போல
பிரிந்து செல்கிறாய்
என்னில் இருந்து - நீ
தங்கியிருந்த உன்
தடங்களை கலைத்து
அப்படியே போட்டுவிட்டு

3
நீ என்
அருகிலிருந்திருந்தால்
உன்னைத்தவிர
வேறெதையும்
நான்காம் பட்சமாய்
துரத்தியடித்திருப்பேன்
இதுபோல எண்ணும் போதெல்லாம்
உன்னைத்தவிர வேறொருத்தியை
பார்வையிருந்து
மனதிற்கு அழைத்துச் செல்கையில்
வாசலில்
வழிமறித்து நிற்கிறாய்
நீ


4
உன்னிடமென்றால்
இந்த ஜென்மத்தில்
மட்டுமல்ல
இன்னும்
எத்தனை பிறவியிலும்
தோற்றுப்போவேன்
அப்போதுதானே
இன்னொரு ஜென்மத்திலும் உன்னை
எதிர்பார்த்தபடிவே
இறக்கமுடியும்

இப்படி பாதியில்
நின்றுபோகிற வார்த்தைகளில்
மீண்டும் உன்னிடம் தொலைத்துவிடுகிறேன்
என் சொற்களை

இன்றுவரை
ஒருதரம் கூட
சொல்லத்தெரியாத
என் காதலை....

அதன் சுகத்தை
நான் அனுபவிக்கிறேன்

நீயே வைத்துக்கொள்
சொல்லாத உனது பதிலை

இறுதியாக

எந்தச் சிலுவையில்
என்னை அறைந்தாலும்
காதலில் உயிர்பெற்று
வருவேன்
அன்பே
அடுத்த ஜென்மத்திலாவது
காத்திரு

9 comments:

Anonymous said...

நல்ல மொழிநடை... அருள்
கலக்கிறீங்க..

Anonymous said...

எப்படிச் சொல்ல
என் கண்மணிக்குள்
நீ செய்த கதிரியல்
வைத்தியத்தை
என் நரம்புகளுக்குள்
என்னென்ன
இரசாயனம் கலந்தாயோ
மேனிப் பரப்பெங்கும்
ஒராயிரம்
மின் அஞ்சல்கள்">>.
நச்..

Anonymous said...

புன்னகை சத்தம் தொடர வழ்துக்கள்

thevanmayam said...

பதினாறு வயது, அந்தப் பருவம் பருகப் பருக விடாய் எடுக்கும். தனிக்கத் தனிக்கத் இனிக்கும். தவமிருந்தாலும் ஒரு சொட்டும் கிடைக்காத தேவாமிர்தம் அந்த நாட்கள். இளமை, அதன் முதற் பகுதி எனக்குள் உணர்வெழுதிப்போன சுவை, தடவிப் பார்க்க தளும்புகளாய் கூட இல்லை இப்போது என்னிடம்.///

ஆரம்பம் அமர்க்களம்!!

thevanmayam said...

எந்தச் சிலுவையில்
என்னை அறைந்தாலும்
காதலில் உயிர்பெற்று
வருவேன்
அன்பே
அடுத்த ஜென்மத்திலாவது
காத்திரு ////

பிரமாதமாக எழுதியுள்ளீர்கள்!!

சகாராவின் புன்னகை said...

நன்றி கவின்,
//நல்ல மொழிநடை... அருள்
கலக்கிறீங்க..//

//நச்.. //

//புன்னகை சத்தம் தொடர வழ்துக்கள்//

எல்லாவற்றுக்குமே ஒரேவார்த்தைதான் சொல்லத்தோன்றுகிறது, நன்றி, உங்கள் அன்னுக்கும் அதரவுக்கும். "அருள்" என்று நீங்கள் அளைத்ததும் என் பால்ய தோழர்களின் ஞாபகம்.
அன்புடன்
அருள்

சகாராவின் புன்னகை said...

வாங்க தேவன் மாயம்

//ஆரம்பம் அமர்க்களம்!! //

//பிரமாதமாக எழுதியுள்ளீர்கள்!!//

காதல் பிரமாதமான விடயம் தானே, இப்பதானே ஆரம்பித்திருக்கிறோம். கலக்கலாம்.

tharsiniy said...

நல்ல மொழிநடை... அருள்
கலக்கிறீங்க..

சகாராவின் புன்னகை said...

வாங்க தர்சினி

நன்றி, வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.