Saturday, March 21, 2009

நிறங்களில்லாத முகத்தின் புன்னகை


பூமி தன்மீது
பூசிக்கொண்ட வர்ணங்களால்
மேனி பூசிக்கொண்டு
அடையாளம் காட்டுகிறேன் - நான்
எனது நிறங்களிலிருந்து
வேறுபட்டுக் கலைகிற
முகங்களில்
என் நிறங்களை
பூச முனைந்து திரும்புகையில்
நிறங்களற்ற பிறிதொரு
வெளியை என்னுள் உணர்கிறேன்
கூடப் பயணிக்கிற
தனிமையின் நான்கு சுவர்களில்
தெறித்து நெழிகிற
என் உணர்வலைகளினின்று
மொழி தொடாதவோர்
அர்த்தம் விளங்க
என்னில்
வளர்ந்து நிற்கும்
கனவு விருட்சங்கள்
மறைந்துபோக
நிலத்தில் விழுந்துகிடக்கும்
எனது நிழலின்
நியாயம் புரிகிறது

என் வாழயியலாத் தருணங்களில்
சுமந்த எண்ணங்களை
அறுத்தெறிந்து வெறுமையாகையில்
சூரியனைவிடவுமோர் ஒளி
என்னுள் பரவுகிறது
அப்போதான எனது
புன்னகை
பகட்டுப் பகல்களையும்
எரித்துக்கொண்டே வளர்கிறது

Monday, March 16, 2009

இறந்தபின்னும் வாழ்வோம்


நாங்கள் எப்போது
வேண்டுமானாலும் கொல்லப்படலாம்
எங்களையும் கடந்து
யுத்தம் போய்க்கொண்டேயிருக்கும்.
இதுவரை விழுந்த
பிணங்களைப் போலவே
நாங்களும்
அனாதைகளாய்க் கிடப்போம்
அப்போது
ஏதோ தேசத்திலிருக்கிற
எங்கள் உறவுகளுக்கு
செய்தி சொல்லி
அனுப்பப்படமாட்டாது

நாங்கள்
இருக்கிறோமோ இல்லையோ
என்பதற்கு தடயங்களேதும்
அப்போதிருக்காது
அந்த தேசத்திலிருந்து
எங்களுக்காக
மகனோ, மகளோ
தாயோ, தந்தையோ
காத்துக்கொண்டிருக்கலாம்
நாங்கள் எங்கேனும்
இருக்கலாம் என்ற
நம்பிக்கையோடு

எங்களையும் தொடர்ந்து
ஒருவேளை
எஞ்சியிருக்கிற உயிர்களெல்லாம்
பிணங்களானபிறகு
அமைதியடையலாம்
இந்த தேசம்
அபோது இந்த
சுதந்திர பூமியில்
பிணவாடையோடு
மலரும் பூக்கள்

Saturday, March 14, 2009

அன்புத் தம்பி அன்பழகனுக்காக- ஆத்துமத்திலிருந்து இறுதி வார்த்தை

அன்பு என்கிற வார்த்தை
உதடுகளில் மட்டும் உயிர்ப்படைவதாகச் சொல்கிறார்கள்
நான் நேசித்தவர்களில் நீயும் ஒருத்தன்
அப்படியானால்
எனது நேசத்தை
என்னவென்று எழுதுவேன் நான்

அன்பனே
உலகை நேசித்த மனிதன் - அதை
அழித்து அழகாக்கியதன் எச்சம்தான்
இப்போதிருக்கும் மரண பூமியாம்
உறவுகளை நேசித்த மனிதன்
பிழவுகளை மட்டுமே பிரசவித்தான்
அதனால் என்னவோ
நமக்குள் மலர்ந்த நட்பு அளவாகவே இருந்தது
அதிகமாகவே நேசித்தேன் நான் - உன்னை

உனதண்ணனின்
நண்பன் என்பதற்காய்
மரியாதை என்ற பெயரில்
ஐந்தடி தூரத்தில்
நின்றன உனது வார்த்தைகள்
எட்டத்தில் நின்றது
நமது உறவு
அதன் முளுஅழகும் இப்போது
எனக்கு விளங்க வைத்து
எட்டாத வானுக்கு விரைந்ததாம்
உன் உயிர்ப் பறவை

தம்பி
இந்த அண்ணன்களுக்கு முன்னமே
ஆகாயம் பிளந்து
சுவர்க்கம் போய்விட்டாயாமே
இப்போது
என்னுள்ளே புரள்வது
குற்ற உணர்வா,
துரோகமா,
வஞ்சகமா - இல்லை
உன்னைப் பிரிந்த
வேதனையா புரியவில்லையடா

உனக்கு நாட்டம் இல்லாதுபோனாலும்
நான் எழுதியதற்காய்
இரண்டுதடவை
புரட்டிவிட்டுச் சொல்வாய்
"நல்லாயிருக்கு கவிதை" என்று
நானும் ஒரு புன்னகை ஒன்றைத் தருவேன்
என்மீதிருந்த உனது நேசத்துக்காக

இன்னொருமுறை
நீ எனக்குச் சொன்னாய்
" அருள் அண்ண இந்தமுறை நீங்க போறீங்க மொறட்டுவ கம்பச்சிற்கு அடுத்தமுறை நான் அங்க வாறன் பாருங்க" என்று
நான் காத்திருந்த அந்த ஒரு வருடத்துக்குள்
உனக்கு கம்பஸ்சும் கிடைத்தது
நீவரவேண்டிய பாதைதான் மரணித்துப்போயிருந்தது

பிறகுதான் சொன்னார்கள்
உன்னையும்
பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று

உலகம் முளுக்க
இருக்கிறான் தமிழன்
ஈழத்திலிருந்து தப்பியவனெல்லாம்
சிங்கார வாழ்க்கை வாழ்கிறான்
சிறீலங்காவில் இன்னும்.
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்
மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமே
பலிகடாவா
இங்கே யாருக்கடா வேண்டும்
தமிழீழம்

ஒரு விடுமுறையில்
இந்த அண்ணன் வீட்டுக்கும்
வந்தாயாம்
எந்தாய் உன்னை உச்சிமோர்ந்து
கண்கள் கலங்கியதை
எனக்குச்சொன்னாள்
தன் பிள்ளைபோல் உணர்ந்ததாய்

அப்போதே
என்கண்கள் பனித்து
எனக்குள்ளே சுரந்த பாசம்
இன்னும் என் அடினெஞ்சில்
தேங்கினிற்குதடா

நீயிருந்தால்
திருவிளாவைப்போல் கலகலப்பாயிருப்போம் நாம்
அந்த நினைவுகள் வந்து என்னைச்
சித்திரவதை செய்யுதடா

தம்பி
இன்னொரு பிறவி இருக்குமானால்
மீண்டும் சந்திப்போம்
இங்கு வேண்டாம்
யுத்தமே இல்லாத ஏதேனுமோர்
தேசத்தில் (கிரகத்தில்)

Sunday, March 8, 2009

சாக்கடையில் மிதக்கும் புன்னகை


அசுத்தமாகிவிட்டது
எனது பேனா
என் இனிய மனிதர்களை
பிரிந்து பிரிந்து
பிழந்துகொண்டு பாய்ந்த
அத்தனை பரிவும்
தீர்ந்தபின்
பொய்யெழுதி வடிகிற
வார்த்தைகளின் வாடைகளோடு
சமரசம் செய்துகொண்டிருக்கிறது
என் பேனா
புத்தகத் தாழ்களுக்குள்
ஒழித்துவைத்த
பிரியங்களையும் துயரங்களையும்
எரியூட்டி
சாக்கடை கால்வாயில்
கரைத்துவிட்டு
பெருமூச்செறிகிற வேளையிலும்
இருதயத்தில்
அறைந்துகொண்டிருக்கிற அந்த
உணர்வினெச்சத்தை இன்னும்
நிறுத்தமுடியவில்லை

வீதியில் இறங்கும்போது
ஏற்றிய
நறுமணம் வீசும் ஒரு புன்னகை
வீடு திரும்பி
கழற்றி மாட்டுகையில்
பலமாகச் சிரிக்கிறது
புறங்கையில் நனைகிற
ஒரு துளி
கண்ணீரைப் பார்த்து

Tuesday, March 3, 2009

நடை பிணம்


நான் மட்டும்
மிச்சமிருக்கிறேன்
என் வாழ்வு பிடுங்கப்பட்டு
தெருக்குப்பையில்
கிடக்கிறது.
நெஞ்சில் இருந்து
நாருரித்தும்
உணர்வுகள் பீறிடாதபடிக்கு
உள்ளத் தீயில்
உணர்வுகள் காய்ந்துவிட்டன.

கடைசியாக
ஒரே ஒரு தடவை
எனக்காக அழக் கூட
கண்ணீரில்லை என்னிடம்…
கனவு வாழ்க்கை எல்லாமும்
கண்ணீரிலே மூழ்கிவிட்டன.
மூச்சுத்திணறி
செத்துக்கிடக்கிறது
எத்தனையோ பேரின் எதிர்காலம்…

ஒருவேளை
இன்னும் சில நாட்களில்
அல்லது
அதற்கு பிறகோ
என்னிடமுள்ள
சூழல் மீதான நியாயங்களையும்
அதன் மீதான
நம்பிக்கையையும் கூட
நான் இழந்துபோகலாம்

இப்போதான
என் வருதம்
உணர்வுகளை காக்க இயலாது
ஓர் உடம்பிருந்து
என்னபயன்