Saturday, July 25, 2009

நானும் அம்மாவும்


"""இதோ ஆண்டவருடைய அடிமை"

இந்த வார்த்தைகள் "அன்னை மரியாள்" வானதூதருக்கு சொன்ன வார்த்தைகள் என்கிறது வேதாகமம் (பைபிள்). கத்தோலிக்க மதத்தவர் மரியாளுக்கு மிகப்பெரிய உன்னத இடத்தை கொடுப்பதற்கு மரியாளின் இந்த எழிமையும் தாழ்மையும் கடவுள்மேல் கொண்டிருந்த அசைக்க முடியா விசுவாசமுமே காரணம்.

மதங்கள் பற்றிய தற்போதய எனது கணிப்பு வேறு,. மதம் என்கிற இயந்திரம், சட்டங்களோ கோட்டுக்களோ இல்லாத காலத்தில் மக்களை நேர்வளிப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டன, ஆனாலும் வேறு பல தேவைகளுக்கும் அது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது இன்னொரு பக்கம். ஆனாலும் என் பால்யப் பருவதில் நானும் ஒரு தீவிர பக்தன், "ஆண்டவருடைய சம்மனசானவர் மரியாளுக்கு மங்களம் சொல்ல - அவள் பரிசுத்தாவியினால் கற்பமானாள்......" என்று தொடங்கும் மூவேளைச் செபம் தொடங்கி செபமாலை எல்லாம் சொல்லிமுடித்துதான் தூங்குவேன், அந்தளவுக்கு பயபக்தியானவன். அதற்குக் காரணம் என்னுடைய அம்மா. திருமணத்திற்கு முதல் அம்மா சைவம் தான், " ஓம் நம சிவாய"
என்று தொடங்கி

"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"

என்றும்

"குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் சுற்றம் நீ பிரானும் நீ தொடந்திலங்கு சோதி நீ கற்ற நூற் கருத்தும் நீ........" என்றும் பாடியவர், அந்த வளக்கத்திலிருந்து சுத்தமாக மாறி "அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே....." என்று துதிக்கவேண்டி வந்தது. யாரும் அம்மாவை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியிருக்கவில்லை, கணவன் வேறு மதம் மனைவி வேறு மதம் என்றிருந்தால், பிள்ளைகளுக்கு எந்த மதத்தை தழுவுவது என்பதில் சிக்கல் ஏற்படும் என்பதற்காகவே தானே கத்தோலிக்க மதத்தில் தன்னையும் முளுமையாக ஈடுபடுத்திக்கொண்டார், "இதோ ஆண்டவருடைய அடிமை" என்று. நான் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால், எனக்கு நினைவு தெரிந்த நளில் இருந்து அம்மா சைவக் கோயிலுக்கு போனதேகிடையாது, முருகா என்றோ பிள்ளயாரே என்றோ வார்த்தைக்கு கூடச் சொன்னதை நான் காணவில்லை. மாறாக தன்னை ஒரு முளுமையான கத்தோலிக்க பெண்ணாக மாற்றிக்கொண்டார். அவரின் மன உறுதியை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். அம்மாவுக்கு தெரிந்ததெல்லாம் வீடு, அலுவலகம், கோவில், செபமாலை.... இப்படித்தான் இருக்கும். அயல் வீடுகளுக்கு போய் வம்பளக்கும் பளக்கம் எல்லாம் இல்லை, கோவிலும் செபமும் என்றே அவரது அதிக நேரத்தை செலவிடுவார். தான் கத்தோலிக்க மதத்துக்கு வந்ததை கடவுளின் அளைப்பகவே கருதுகிறார்

என் சின்ன வயதில், அம்மா எனக்கு ஹிட்லர், ஆனால் நான் தான் அம்மாவின்ர ஜேர்மனியாச்சே. சாப்பிடு, குளி, செபம் சொல்லு, படி.... என்று எந்த நேரமும் எனக்கு கட்டளைகளைப் போடும் ஹிட்லர். எதையும் சரிவரச் செய்யாவிட்டால் தண்டனைகளுமுண்டு. பின்னேரம் ஐந்து மணியானால் போதும் எனக்கு விடுதலை, அதுதான் அப்பா வேலைவிட்டு வாற நேரம். அப்பாவின்ர சைக்கிளை தூரத்தில் கண்டாலே போதும் அம்மாவின் சட்டங்கள் காலாவதியாகிவிடும். ஓடிப்போய் சைக்கிள்ள ஏறி அப்பாவின் களுத்தை கட்டிக்கொண்டு வந்தும் வராததுமா எனது மேன்முறயீடுகளை ஆரம்பித்துவிடுவேன், "அப்பா இண்டைக்கு அம்மா எனக்கு அடிச்சவா நுள்ளினவா....." அப்பா காத்திரமான கண்டனத்தை வெளியிடுவார் "உவவுக்கு எந்த நேரமும் பிள்ளைக்கு அடிக்கிறதுதான் வேலை ....க்கும். அம்மாவின் பதிலறிக்கையும் கடுமையாகவே இருக்கும் "காணும் அப்பரும் பிள்ளையும் செல்லம் கொஞ்சினது, இவ்வளவு நேரமும் படிச்சுக்கொண்டிருந்தவன் பார் தேப்பனை கண்டோண்ண எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுபோட்டு........" இப்படியே கலாட்டா தொடரும். அந்த ஓலைக் குடிசை வாழ்வின் இன்பமும் திருப்தியும், இன்னொருமுறை நான் அனுபவிக்கப்போவதில்லை.

அப்போதெல்லாம் தம்பி யாருடைய செல்லம் என்று கேட்டால் உடனே சொல்வேன் "அப்பான்ர செல்லம்" இப்படிச் சொல்லியெ அம்மவை தனிமைப்படுத்தியிருக்கிறேன். அதனால் என்னவோ அம்மாவின் நெருக்கம், தளுவல், முத்தங்கள் எல்லாம் எனக்கு குறைவாகவே கிடைத்தது. அப்போது அம்மா இந்த நெருக்கத்தை வளர்ப்பதற்கு தன்னை தயார்ப்படுத்தியிருக்கவில்லை என்பதாகவும் கருதுகிறேன் நான். பின்னாளில், பிள்ளைகள் தம் தாயுடனான நெருக்கத்தை, கொஞ்சிக்குலவுவதை காண்கிறபோது ஒருவித சங்கடமான மனனிலையை உணர்வேன் நான், இவையெல்லாம் அம்மாவிடமிருந்து எனக்கு கிடைக்கவில்லையே என்கிற தவிப்பினோசை என் ஆழ்மனதில் ஒலிப்பதை உணர்வேன். அதற்காக நான் அம்மாவின் அன்பிலும் பாசத்திலும் இருந்து விலகி இருந்துவிட்டேன் என்று அர்த்தம் அல்ல, நமக்கு பிடித்தமான ஒன்றை தவறிவிட்டோமே என்கிற உணர்வு மட்டும்தான்.

இப்ப நான் "அம்மா செல்லம்" கட்சி மாறியாச்சு. இன்னும் அப்பா செல்லமாக இரண்டு தங்கைகள். புத்தரின் நிலையாமைக் கொள்கை சொல்வதுபோல மனிதனிலும் மாற்றங்கள் நிகள்ந்துகொண்டுதானிருக்கும்.

என்னைப் பொறுத்தவரை காணாத கடவுளை மகிமைப்படுத்துகிறோமே அந்த மேன்மையை பெற்ற தாய்க்குத் தந்தால் என்ன? ஒரு தாய் கருவில் இருந்து வாழ்வின் எல்லைவரை சுமக்கிற சிலுவைகள்தான் பிள்ளைகள். வேறெந்த உறவுகளோடும் ஒப்பிடமுடியாத ஒரே உறவு தாய்.

Wednesday, July 22, 2009

போலிப் புன்னகை


வலிகள் வடியாத
துயரப் பேளை ஒன்று
என் தோழ்களை
எப்போதும் அழுத்திக்கொண்டிருக்கிறது
வேணிலின் ஸ்பரிசங்கள்
ஏதோ ஒரு தூரத்திலிருந்து
எனக்குள் கிளர்ந்தெளும் ஞாபகங்கள் - அவை
மரணித்துப்போய்விட்ட
அதன் நிஜத்தை எனக்குள்
ஏற்க மறுக்கின்றன

மீண்டும் எனக்கு
கொய்யக் கிடைத்த புன்னகைகள்
குறைகளோடும் காயங்களோடுமிருந்தன
பூக்கள் தம் காயங்களை
மறைத்துக்கொண்டு
முகம்காட்டி சிரித்தன
ஆனாலும் அவற்றின்
வாசனையில் மரணவாடையிருந்தது

கிளைகள் ஒடிந்தபின்னும்
மரங்கள் பூக்கின்றன
காய்க்கின்றன
எல்லாம் சரியாகிவிடும்
வடுக்களைத் தவிர.

[ இந்தக் கவிதை நான் கைகளிலும் தோளிலும் சுமந்த தங்கை "மியூரி"க்கு சமர்ப்பணம். " அண்ணா மீண்டும் வீட்ட வரும்போது என் போட்டோ இந்தச் சுவரில் தொங்கும்" இறுதியாக அவள் என்குறித்து சொன்ன வார்த்தைகள், அதை நிஜமாக்கிவிட்டு சென்றுவிட்டாள். அண்மையில் நான் வீட்டுக்கு சென்றபோது பெரியம்மா என்னை அணைத்துக்கொண்டு "தம்பி உன்ர தங்கச்சி நம்மை எல்லாம் விட்டுட்டு போய்ட்டாள்டா" என்று கதறினார். அதன் பிறகு நாம் நிறயப் பேசினோம், கண்ணீரை துடைத்துக்கொண்டு முகங்களில் பூத்த புன்னகை இது ]

Sunday, July 19, 2009

முகாமில் ஒருநாள்


அண்மையில் வவுனியா நலன்புரிநிலையத்திற்கு குடும்பத்தாரை பார்வையிடச் சென்றிருந்தேன், முட்கம்பிகளாலான ஆறடி உயர வேலியில் காத்துக்கிடந்தமக்களை பார்வையிட காண கூடடமாக மக்கள் இன்னொரு பக்கத்தில் நின்றார்கள். என்னை கவனமாக கூட்டிச்செல்லுமாறு மச்சாள் (என்வயதுதான்) ஒருவரிடம் அத்தான் ஏற்பாடு செய்திருந்தார். அனுமதி கிடைத்தது மடையுடைத்த வெள்ளம்போல் ஓடினோம், சோதனைகளுக்கு பிறகு 15பேராக 15நிமிடம் வரை பார்க்க அனுமதி. அங்கே அப்பாவும் அம்மாவும் தங்கைகளும் காத்திருந்தனர், மகன் வெய்யிலில் வருவான் என்பதற்காக அப்பா கொக்கொக்கோலா குளிர்பான போத்திலுடன் நின்றார், அம்மான் தானே சமைத்த எனக்கு விருப்பமான உணவுப்பொருட்களுடனும் ஒரு பையில் சில பொருகளுடனு நின்றார்கள். அப்பா வேலைக்கு லீவுபோட்டு வந்திருந்தார், தங்கைகள் பாடசாலை போகவில்லை. "பாசம் ஒரு வேதம் பேசடி கிளியே" பேசினோம். வார்த்தைகள் தீராமலே நேரம் தேய்ந்துபோனது. திருப்பி அனுப்பப்பட்டோம். மீண்டும் இராணுவகாவலர்களிடம் போய் பேசினேன், நான் கொழும்பில் இருந்து வருவதாகவும் உள்ளே செல்ல அனுமதிவேண்டும் என்றும்..... சிறிது நேர விவாதத்திற்கு பிறகு உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

உள்ளே சென்று எமக்கு கொடுக்கப்பட்ட கொட்டகைக்குள் சென்றோம். மகிழ்ச்சி முகங்களில் பிரகாசித்தது. அங்கே செல்வதற்கு பணம் என்னிடமிருக்கவில்லை, அப்போது கௌசி அண்ணா, ஒரு தொகை பணத்தை கொடுத்து போய் வீட்டாரை பார்த்துவா எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார். இந்த மனம் இப்போது எத்தனை பேருக்குவரும். அந்தப்பணத்தில் தங்கைகளுக்கும் அப்பா அம்மாவுக்கும் உடைகளும் இனிப்புப் பண்டங்களும் வாங்கிப்போயிருந்தேன். அவர்கள் என்னை பார்த்த சந்தோசத்திற்குமேல் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லையானாலும், அண்ணா வாங்கிக்கொடுத்தது, மகன் வாங்கிக்கொடுத்தது என்று நண்பர்களிடம் காட்டினார்கள்.

நான் எல்லாவற்றையும் மறந்து ஒருநாள் சதோச்மாயிருந்தேன், அம்மா தேறிவிட்டார், தங்கைகள் தேறிவிட்டார்கள், சாப்பாட்டுக்கு குறையில்லை, அவர்கள் பேச்சில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருந்தது. என் அழகுத்தங்கையின் அழகுக் கூந்தலை தவிர, மீட்டு விட்டார்கள் தங்களை. நான் தூக்கி எறிந்த கடவுளை தேடிப்போய் சொன்னேன், இனியும் வேதனைகளை கொடுக்க நினைத்தால் அதை எனக்கே கொடு, இவர்களை விட்டுவிடு, சாவின் குகையிலிருந்து வந்த இவர்களிடம் இப்போது புதிதாக அரும்புகிற மகிழ்ச்சியை பிடுங்கிவிடாதே!

அங்கே எனக்காக நிறைய சாப்பாடுகள், பலாப்பளம். சோடா, கேக், சுவீட்ஸ்! அம்மா அவசர அவசரமாக சமைத்து மத்தியானம் சாப்பாடும்தந்தார்ர், எனக்கும் தங்கைகளுக்கும் தன் கையாலேயே சாப்பாடு தந்தார், அம்மாவுக்கு நாங்கள் மூன்றுபேரும் எப்போதும் இப்படியே பாசமாக ஒற்றுமையாக இருக்கவேண்டு என்றே விருப்பம், அதற்காகவே ஒரு கோப்பையில் சாப்பாடு போட்டு எம் மூவருக்கும் தருவார், அவர் அடிக்கடி சொல்வார் " எப்படி எம்முடையதெல்லாம் உங்களுடையதாகிறதோ அப்படியே உங்களுக்குள்ளும் எப்போதும் இருக்கவேண்டும் என்று" அதன் பொருள் இப்போதுதான் எனக்கு புரிகிறது, எனக்குளேயே நானும் சொல்லிக்கொள்கிறேன் "என்னுடையதெல்லாம் உங்களுடையதே" இந்த ஐந்துபோர் கொண்ட உலகம் எபோதும் இருக்கும் அம்மா.

இந்நாள் வரையிலான என்னது தமிழுக்கும் சிந்தனைக்கும் எப்படி அம்மா காரணமாக இருந்தாரோ அதேபோல என் அறிவுக்கும் ஆழுமைக்கும் பண்புக்கும் பளக்கத்துக்கும் அப்பா காரணமாக இருக்கிறார். அவர் இதுவரை எங்களை கைநீட்டி அடித்ததுகூடக்கிடையாது, குடிப்பளக்கமோ சந்திவளியே வெட்டிப்பேச்சு பேசும் பளக்கமோ ஏன் கடையில் தேனீர் அருந்தக்கூட போகமாட்டார். எங்களுக்ககவே தன் எல்லா உளைப்பையும் சிந்தனையையும் செலவளிப்பவர். எனக்கு இப்போதும் வெளியே போய் ஒரு அலுவல் பார்க்கத் தயக்கம், என் தங்கைக்கு தேநீர்கூட தயாரிக்கத்தெரியாது எல்லாவற்றையும் அவரே செய்துதருவார், இது இன்னொருவருக்கு பிளையாகப்படலாம் ஆனால் அவர் எங்கள்மேல் வைத்துள்ள பாசம், அக்கறை என்பதைத்தான் நாங்கள் உணர்கிறோம். அந்தப்பாசத்தினால்தான் புலிகளால் கொடூரமாகத்தாக்கப்பட்டு சுயனினைவை இழந்து இரத்தவெள்ளத்தில் கிடந்தார், தன் பிள்ளையை கொல்லக்கொடுக்க எப்படி ஒரு தந்தையால் சம்மதிக்கமுடியும் அதனாலேயே அடிபட்டார். இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களுக்குமேல் எங்களை இருக்கவைத்து சாப்பாடுபோட இயலும் அவரால், அதற்காக அவர் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார். முகாம் மக்களுக்கு தன் பணியை செய்ய ஆரம்பித்துவிட்டார் அப்பா என்று அம்மா சொன்னார். எங்களுக்கு மட்டுமல்லாமல் உதவிகேட்டு வருபவர்களுக்கு சலிக்காமல் உதவுவார். எங்களுக்கு எல்லாமே அப்பாதான், அவரின் அன்புக்கும் அக்கறைக்கும் பதில் என்ன செய்துவிடப்போகிறோம்?

மாலையானது நான் விடைபெற இருந்தேன், என்னை வாசல்வரை அளைத்துவந்தார்கள், அம்மா பிரியமுடியாமல் என்னை அணைத்து முத்தமிட்டா, கடைசி தங்கையும் வெட்கப்படுக்கொண்டே ம்ம்ம் கொஞ்சிளாள், அம்மா சொல்லிவைத்தார் போல. அப்ப எனக்கு கொஞ்சேல்ல? பெரியவள் ஓடிவந்து என் இரண்டு கன்னங்களிலும் ம்ம்ம். "பாசம் ஒரு வேதம் பேசடி கிளியெ

தூரத்தே நான் மறையும்வரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த நினைவுகள் போதும் என்னை வாழ்வின் வலிகளில் இருந்து விடுவிக்க