Sunday, February 21, 2010

தாய்-சேய் உறவுநிலை

- ஒரு சமூகஉளவியல் நோக்கு


அம்மா என்ற சொல்லிற்கு அன்பு, கருணை இரக்கம், பாரபட்சமற்ற பாசம் என்பதான விளக்கங்களைக் கொடுத்து அவளை ஒரு உன்னத நிலையில் வைத்திருக்கின்றது உலகம். இன்றும் வேறெல்லா உறவுகளையும் பல மைல் தூரம் பின்தள்ளிவிட்டு தன்னிலும் மேலாக (தன் உயிரிலும் மேலாக) தன் சேயைப் பேணி வளர்த்து பாதுகாத்து வருகின்றவளை, மனிதக் கடவுள் என்ற நிலையில் அம்மாவை வைப்பது நியாயமானதே. இந்தவிதி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். தாவரங்கள் மீது எனது பரிசோதனை விளக்கம் செல்லவில்லை. காரணம் அந்தளவுக்கு நுணுக்கமாக அவைபற்றி நான் அறிந்திருக்கவில்லை.

ஒரு தாய்க்கு தனது பிள்ளை எப்பொழுதுமே குழந்தையாகத்தான் தெரிகிறாள் என்பார்கள். அந்தளவுக்கு தாய்சேய் உறவு ஆழமானதாகவும், புனிதமானதாகவும், மிகுந்த புரிதலினையும் கொண்டிருப்பதாலேயே, தயானவள் உலகில் உயர்ந்தவளாகக் கருதப்படுகின்றாள். காதலுக்கு அடுத்தபடியான கவிஞர்கள் பாடும் கவிதைகளின் பாடுபொருள் அம்மாவாகத்தான் இருக்கும். உயிராக்கி ஒன்றை உருவாக்குவதில் தாய்க்கும் தந்தைக்கும் சரிசம பங்கு இருக்கின்ற போதிலும், உயிரியை தனக்குள்ளேயே உருவாக்கி வளர்த்து, உரிய காலத்தில் பிரசவித்து, தன் உடம்பையே உணவாக்கி, பாலூட்டி ஆளாக்கும் பண்பை தாய் மட்டுமே கொண்டிருக்கின்றாள். ஆகவே தான் தாய்க்கும் ஒரு குழந்தைக்குமான உறவினை வேறேந்த உறவுகளோடும் ஒப்புவமை காட்ட முடியாதிருக்கின்றது. பறவைகளும், ஊர்வனவும், இதிலிருந்து சற்று வேறுபட்டு, குஞ்சை உருவாக்கக் கூடிய வரையிலும், முட்டையிட்டு அதன் பின்பு அடைகாத்து முட்டைகள் பொரித்து குஞ்சுகளானதும் பின்பு முலையூட்டிகளைப் போலவே வளர்த்து, சூழலுக்கு ஈடுகொடுக்க கூடிய நிலைக்கு உயர்த்துவது தாயில் தான் தங்கியிருக்கின்றது. ஆக பூமிக்கு பிரசவம் கொடுப்பவள் தாயாகிறாள். பூமிக்கிரகம் தொடர்ந்தும் உயிரோடிருப் பதற்கு இயற்கை “தாய்” என்னும் படைக்கும் கருவியை வைத்திருக்கிறது. அதனால் தான் மெஞ்ஞானம் சொல்லும் படைக்கும் கடவுள் பிரம்மாவின் வடிவமே அம்மாவாக காணப்படுகிறாள். ஆக கடவுள் என்பதற்கான மூலக்கரு சூழலின் தாக்கத்தால் தோன்றினாலும், தாயிலிருந்தே அதற்கான அமைப்பு ஒன்றை மனிதன் உருவாக்கியிருக்க கூடும். அதனால் தான் “ஆலயங்கள் தேவையில்லை, ஆகமங்கள் தேவையில்லை தாயின் இதயம் போதும் சஞ்சலமேதுமில்லை..” என்று கவிஞன் பாடுகின்றான். இந்தளவுக்கு புனிதமும் சிறப்பும் மேன்மையும் வாய்ந்த “தாய்” என்கிறவளுக்கும் சேய்க்கும் இடையிலான உறவையும் பிறப்பின் பரிமாணத்தையும் உளவியல் விஞ்ஞானம் எப்படிப் பார்க்கின்றது, பரிசீலிக்கின்றது என்று விரிவாக பார்ப்போம்.

அமீபா என்கின்ற ஒருகல அங்கி மூலம் உலகம் படைக்கப்பட்டது. அதாவது உயிரினங்கள் உருவாக்கப்பட்டன என்றது விஞ்ஞானம். ஆக பூமியின் முதல் தாய் அமீபா தான். ஆதாமும் ஏவாளும் பூமியின் முதற் பெற்றோர்கள் என்று பௌபிள் சொன்னாலும், ஆதியிலேயே கடவுளுடைய ஆவி நீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தது. என்று பழையாகமம் (பௌபிள்) கூறுகின்றது. இதன் கருத்து விஞ்ஞானத்தையும், உயிர்களின் பிறப்பு தொடர்பான அதன் விளக்கத்தையும் ஒத்தேயிருக்கின்றது. அதாவது நீரிலிருந்தே உயிர்கள் தோன்ற ஆரம்பித்ததாகவும், அதன் பரிணாம வளர்ச்சியிலேயே கூர்ப்பின் மூலம வேறுபட்ட சூழலுக்கேற்ப வேறுபட்ட வடிவங்களையும் தோற்றங்களையும் உடைய, குறிப்பிட்ட சூழலுக்கேற்ப தம்மை இசைவாக்கி கொண்ட பல்வேறு உயினங்கள் தோன்றியிருக்கலாம் என விஞ்ஞானம் சொல்கின்றது. இன்று எண்ணிலடங்கா உயிரின வகைகள் காணப்பட்டாலும் மனிதன் என்கிற ஒரு இனம் மட்டுமே பரிணாமத்தின் உச்ச வளர்ச்சியடைந்து பூமியை ஆளவும் தனக்கு உகந்த வகையில் மாற்றியமைக்க கூடிய வல்லமை உடையவானாகவும் மாறியிருக்கின்றான். ஆக பூமியின் முதல் கர்ப்பம் கடலாக தான் இருந்திருக்க வேண்டும். முலையூட்டிகளின் கருவறையும் அதே போன்ற திரவத் தன்மையுடையதாக இருக்கின்றமை இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. இன்னும் பௌபிள் கூறும் “ஆதியில் கடவுளின் ஆவி நீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தது” என்பதும் விஞ்ஞானத்தின் மேற்கண்ட உயிரின் பிறப்பியல் கருத்தோடு ஒத்திருக்கின்றது. அன்றைய மக்கள் நம்பமாட்டார்கள் என்பதற்காக கடவுளுடன் தொடர்புபடுத்தி தங்கள் கருத்துக்களை அறிஞர்கள் கூறியிருக்க கூடும்.

மனிதனைப் பொறுத்தவரையில் பெண்ணின் முட்டையும் ஆணின் விந்தும் சேர்ந்து பெண்ணின் கருப்பையில் வளர்க்கப்பட்டு உரிய வளர்ச்சி அடைந்து குழந்தையாகப் பிரசவிக்கின்றாள் தாய். தாயினுடைய வயிற்றில் இருக்கின்ற வரைக்கும் குழந்தைக்கு உணவு தொப்புள் கொடியூடாகவும் மூச்சு தலைப் பகுதியூடாகவும் செல்கின்றது. ஆக மூச்சும், தசையிலான உடம்பும் தாய் தந்த, தன் மூச்சும் தன்னுயிருமாகும். அதைத் தான் தொப்புள் கொடி உறவு என்றும் நம்மவர் கூறுவர்.குழந்தை பிறந்ததும் சில விநாடிகளில் அழுகின்றது. அதுவே அதன் முதல் மூச்சாகும். இதனாலேயே கவிஞன் 'பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான்' என்று பாடியிருக்கின்றான். குழந்தை பிறந்த பிற்பாடு ஒரு குறிப்பிட்ட பருவத்தை அடையும் வரை அது தாயின் அரவணைப்பிலும், அன்பிலும் வாழ்கின்றது. தாயை பிரிந்து வாழும் குழந்தை பலவீனமான, பூரண வளர்ச்சியடையாத மனிதனாகின்றது என்பது பொதுவான கருத்து. இதையே உளவியல் எப்படிப் பார்க்கின்றது? உளவியல் அறிஞர்களின் கருத்துக்கள் சராசரி மனிதர்களை சற்று மலைப்படையச் செய்வது தெரிந்ததே. அதைவிட சமய, சமூக சட்டங்களால் வன்மையாக சாடப்படுவதும் இந்த உளவியலாளர்கள் தான்.

பாலியல் தூண்டல் சக்தி(LIBIDO)

பாலியல் தூண்டல் சக்தியே உயிர்களை இயக்கும் அடிப்படைச் சக்தி என்று உளவியல் சொல்கின்றது. ஆக அன்பு, பாசம் காதல், விருப்பம், பரிவு என்கிற எல்லா வகையான மனித உன்னத பண்புகளையும் தனக்குள்ளே இழுத்து வைத்துக்கொண்டு தனது வெவ்வேறு முகங்களே அவை என்கிறது இந்த பாலியல் தூண்டல் சக்தி. இந்தக் கருத்தை ஆரம்பத்தில் சமூகம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், பிற்பாடு தன்னளவில் ஏற்றுக்கொண்டு அதன் பிற்பாடு வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டது. பாலியல் தூண்டல் சக்தியானது பிறந்த குழந்தைகளிலும் காணப்படுவதாகவும், தாய் தன் குழந்தையை அரவணைக்கின்ற போதும், தழுவுதலின் போதும் அதன் சுகத்தையே குழந்தை உணர்வதாகவும் (அனுபவிப்பதாகவும்) உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். மெஞ்ஞான பண்பாட்டாளர்கள் இதனை வன்மையாக மறுத்தாலும், பல ஆண்டுகளாக விலங்குகளிலும், மனிதர்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னரே உளவியலாளர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் இங்கே முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பிரபல உளவியலாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுவதாவது, பிறந்த குழந்தை ஒன்று அதன் Critical period ஐத் கடக்கும் முன்பு தன் தாயின் அரவணைப்பில் தழுவுதலில் மூலம் தன் பாலியல் தேவையினைப் பெற்றுக்கொள்வதாக கூறுகிறார். அப்படி அந்த Critical period இல் தாயின் அரவணைப்பை பெறாத குழந்தை பின்பு பருவமடைந்த பிறகு, பின்னாளில் ஆரோக்கியமான உடலுறவுக்கு தன்னை தாயார்ப்படுத்த முடியாமலிருக்கிறது அல்லது பலவீனமான உடலமைப்பை கொண்டிருக்கிறது என்றும் அறியப்பட்டுள்ளது.

மேலும் “எல்லா ஆண்களுக்கும் அவர்களது அம்மா தான் முதல் காதலி” என்கிறார் சிக்மண்ட் பிராய்டு. இன்னும் Critical period இன் போது குழந்தை தாயை தனக்கு மட்டுமே சொந்தமானவளாக கருதுகின்றதென்றும் அதற்கு குறுக்கே வருகின்ற தந்தையை அல்லது இன்னொரு குழந்தையை தனது எதிரியாகவே பார்க்கின்றதென்றும் அவர் கூறுகிறார். இதனால் இந்த Period இன் போது குழந்தைகள் கவனமாக கையாளப்பட வேண்டியவர்களாகின்றனர். குழந்தையின் இயல்பான செயற்பாடுகளை தடுக்கவோ தண்டிக்கவோ கூடாது. அப்படி தடுத்து அதன் இயல்பான செயற்பாடுகளை கண்டிக்கின்ற போது அந்தக் குழந்தையின் மனதில் ஏற்படும் 'தவறான பதிவுகள்' (Mal-imprinting) பின்னாளில் அதன் உடல், உள ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. மேலும் தாயின் அரவணைப்பு அல்லது தழுவல் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கே அதிகம் தேவைப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு தாயினது அரவணைப்பைப் பெறாத குழந்தையே பின்னாளில் வக்கிரமான எண்ணங்களுக்கு தூண்டப்படுகின்றது என்றும் சொல்லப்படுகின்றது. இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள். நாம் யாரும் அதில் உடன்பாடில்லை என்று விலகி நிற்க முடியாது.

தாயின் அன்போடு, பாலியல் தூண்டல் சக்தியையும் தொடர்புபடுத்திக் கூறும் போது அதை கசப்பானதொன்றாகவே சமூகம் பார்க்கின்றது. ஆனாலும், அது உண்மை என நிரூபிக்கப்பட்ட கருத்தாகும். உண்மையில் பாலியல் தூண்டல் சக்தி என்பது காமம் அல்லது மோகம் என்ற கருத்துப்படவில்லை. அல்லது லிபிடோ (Libido) என்ற சொல்லிற்கு சரியான தமிழ் பதம் கொடுக்கப்படவில்லை. மாறாக அது மனிதனை இயக்கும் ஒருவகை சக்தியே ஆகும். அதற்கு நாம் பாலியல் தூண்டல் சக்தி என்று பெயர் கொடுத்திருக்கின்றோம் அவ்வளவு தான். மாறாக தாய் சேய் உறவை அசிங்கப்படுத்துவனவாக இந்த ஆய்வு முடிவுகள் அமையவில்லை. நம் சமூகமே அதை சரியாக விளங்கிக் கொள்ளாமல் தவறாகப் பார்க்கின்றது.

உதாரணத்திற்கு மின்சாரத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைய உலகின் சக்தி மிக்க ஜாம்பவான் அது. மின்சாரம் நின்று போனால் உலகமே அணைந்து போகும் காலம் வந்துவிட்டது. நமது நாட்டில் அதன் தாக்கம் பாரதூரமாக இல்லாது போனாலும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து அவுஸ்ரேலியா போன்ற மிகப் பெரிய நாடுகளில் மின்சாரம் இரண்டு வாரம் நின்று போனால் பாதி சனத்தொகை குறைந்து போகும். இந்த மின்சாரத்தில்; பல வகைகள் உள்ளன. ஆடலோட்டம், நேரோட்டம் இப்படி தேவைக்கு ஏற்றாற்போல அதை மனிதன் நுகர்கின்றான். கணக்கிட முடியாத மின் அழுத்தத்தை கொண்டிருக்கின்றது மின்னல். அது அழிவை மட்டுமே புரிகிறது. இன்னும் குறைகடத்திகளில் பாயும் மின்சாரம் மிகவும் குறைந்த மின்னழுத்தத்தை கொண்டிருக்கின்றது. அது தாக்கி மனிதன் இறப்பதில்லை. மேலும் ஒவ்வொரு அணுக்களிலும் அதன் இறுதியோட்டில் இருக்கின்ற சுயாதீன இலத்திரன்களே மின்சக்திக்கு காரணமாய் அமைகின்றன. இலத்திரன்களின் தொடர்ச்சியான ஓட்டமே மின்னோட்டமாகும். ஆக எல்லா வகையான பொருட்களிலும் குறிப்பிடத்தக்க அளவு மிகமிக சிறிய மின்னோட்டம் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது எனலாம். இதைப் போலவே மனிதனில் காணப்படும் 'பாலியல் தூண்டல் சக்தி'யும் மிகப் பிரம்மாண்டமான உடற்கட்டமைப்புக்குள் கோமோன்கள் மூலம் செயற்படுத்தப் படுகின்ற சக்தி முதலாகும். அதன் வோட்டேச் அளவுக்கு ஏற்ப அன்பு, பாசம், பிரியம், சிநேகம் முதற்கொண்டு காதல் காமம் வரை பலவாறான நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த 'லிபடோ' (libido) அவற்றின் அளவுகள் மீறப்படாத வரை அந்த நிலைகள் பேண்படுகின்றன. அவற்றின் புனிதமும் காக்கப்படக் கூடியாதாக இருக்கின்றது.

இது இப்படியிருக்க இன்னொரு பக்கம் உயிரங்கிகளின் பிறப்பின் தேவையே தத்தம் இனவிருத்திதான் என்கிறது விஞ்ஞானச் சித்தாந்தம். ஆக உயிர்களின் வாழ்வின் மீதான ஒரே உந்துவிசை பாலியல் தூண்டல் சக்தியாகத் தானிருக்க முடியும். எது எப்படியோ, உயிர்களின் தோற்றத்திற்கு தாயே காரணமாக இருப்பதைப் போல, உறவுகளின் தோற்றத்திற்கும் தாயே ஆதார சக்தியாக இருக்கிறாள், அவளது 'அன்பு' மனிதர்கள் வரையறுத்துள்ளதைப் போல தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்பதில் ஜயமில்லை.

"THE HAND THAT ROCKS THE CRADLE IS THE HAND RULES THE WORLD"

Reference
1. Sigmund freud